ட்விட்டரில் ட்ரெண்ட் ஆன #WeSupportSeeman; வழக்கு போட்டும் அடங்காத அண்ணன், தம்பிகள்!

தமிழகம்
Updated Oct 14, 2019 | 17:57 IST | Times Now

கதர் கட்டினால் காங்கிரஸ், காவி கட்டினால் பாஜக. இதை தவிற இரண்டு கட்சிகளுக்கும் என்ன கொள்கை வேறுபாடு இருக்கிறது? - என்று சீமான் பத்திரிகையாளர்களிடம் கேள்வி எழுப்பினார்.

#WeSupportSeeman trending on Twitter, ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் சீமான்
ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் சீமான்  |  Photo Credit: Twitter

சென்னை: ராஜீவ் காந்தி கொலையை நியாயப்படுத்தும் வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ட்விட்டரில் #WeSupportSeeman எனும் ஹேஷ்டேக்கை அவரது ஆதரவாளர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். சென்னை அளவில் முதலிடத்தில் ட்ரெண்ட் ஆகி வரும் இந்த ஹேஷ்டேக், தற்போது இந்திய அளவிலும் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

இதற்கிடையே, சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சீமான் பேசியதாவது: ”விடுதலை புலிகளை அழித்துவிட்டோம் என்கிறார்கள். ஆனால் அவர்கள் மீதான தடையை நீட்டிக்கிறார்கள். எல்லோரையும் பயங்கரவாதியாக பார்க்கும் ஒரு போக்கு இருக்கிறது. 28 ஆண்டுகளாக 7 பேர் விடுதலைக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறார்கள். காந்தியை நாங்கள் தான் கொன்றோம் என்று பேசுவோர் மீது இவர்கள் கோபப்படவில்லை. காந்தியின் உருவப்படத்தை தாக்கும் போது இவர்கள் கொந்தளிக்கவில்லை.

தேசிய ஒருமைப்பாடு குறித்து பேச காங்கிரசுக்கு என்ன தகுதி இருக்கிறது? காவிரி நதிநீர் பிரச்சனையில் அவர்களது நிலைப்பாடு என்ன? தமிழகத்திற்கு உரிய நதிநீரை அவர்களால் பெற்றுத்தர முடிந்ததா? விடுதலைப் புலிகள் தான் ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்று நீங்கள் தான் சொல்கிறீர்கள். ராஜீவ் காந்தியை கொன்றுவிட்டொம் என்று பழி சுமத்தி தானே (இலங்கையில்) போர் தொடுத்து லட்சக்கணக்கான மக்களை கொன்றீர்கள்? அந்த போரை நடத்தியது காங்கிரஸ் அரசு, உடன் இருந்தது திமுக.

பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் ராணுவத்தின் பிடியில் இருக்கிறான் என்று தகவல் சொன்னபோது, பிரபாகரன் குடும்பத்தில் ஒருவரும் உயிருடன் இருக்கக் கூடாது என்று சொன்னது யார்? அந்த வன்மமும் கோபமும் கொதித்துக் கொண்டிருக்கிறது. 10 ஆண்டுகளாக அந்த அநீதிக்கு நீதி கூட பெற முடியவில்லை; அவ்வளவு இடையூறு. ஒருவரின் மரணத்தை ஒரு இனத்தின் மரணத்துடன் சமப்படுத்தி நிறுத்தினீர்கள்.

பாஜக, காங்கிரஸ் இரண்டையும் சமமாகத் தான் பார்க்கிறேன். கச்சத்தீவு கொடுத்தது கொடுத்தது தான் என இரண்டு கட்சிகளும் சொல்கின்றன. அணு உலையை எதிர்த்து போராடுகிறவனை தேசத்துரோகி என்று இரண்டு கட்சிகளும் சொல்கின்றன. நீட் தேர்வு, ஜிஎஸ்டி ஆகியவற்றை கொண்டு வந்தது காங்கிரஸ், செயல்படுத்தியது பாஜக. இந்திய பொருளாதாரம் சரிந்ததற்கு ஜிஎஸ்டி தான் காரணம் என்று உலக வங்கியே சொல்கிறது.

கதர் கட்டினால் காங்கிரஸ், காவி கட்டினால் பாஜக. இதை தவிற இரண்டு கட்சிகளுக்கும் என்ன கொள்கை வேறுபாடு இருக்கிறது? ராமர் கோவிலை பாஜக கட்டாது, நாங்கள் தான் கட்டுவோம் என்று கே.எஸ்.அழகிரி சொல்கிறார். பொருளாதாரம், கல்வி, வெளியுறவு, தனியார்மயம், தாராளமயம், உலகமயம் ஆகியவற்றில் இரு கட்சிகளுக்கும் ஒரே கொள்கை தான்.” இவ்வாறு சீமான் பேசினார். 

NEXT STORY