ஆற்றின் கரையில் கொட்டிக்கிடந்த ஆயிரக்கணக்கான ஆதார் கார்டுகள்!

தமிழகம்
Updated May 16, 2019 | 13:31 IST | Times Now

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் ஆற்றின் கரையில் ஆயிரக்கணக்கான ஆதார் கார்டுகள் கொட்டிக் கிடந்ததால் கிராம மக்கள் அதிர்ச்சி

கொட்டிக்கிடந்த ஆயிரக்கணக்கான ஆதார் கார்டுகள்
கொட்டிக்கிடந்த ஆயிரக்கணக்கான ஆதார் கார்டுகள்  |  Photo Credit: Twitter

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் ஆற்றின் கரையில் ஆயிரக்கணக்கான ஆதார் கார்டுகள் கொட்டிக் கிடந்ததால் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருத்துறைப்பூண்டி ஆற்றங்கரையில் அப்பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் நேற்று விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு சாக்குப் பைகளில் கட்டுக்கட்டாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதார் கார்டுகள் இருப்பதைக் கண்டனர். இதுகுறித்து, கிராமத்தினருக்கு சிறுவர்கள் தகவல் அளித்தனர். உடனடியாக அங்கு சென்று பார்த்த கிராமத்தினர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய ஆதார் கார்டுகள் கொட்டிக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். 

புதிய ஆதார் கார்டுகள் அனைத்தும் அங்குள்ள சுற்றுவட்டார கிராமத்தினரின் முகவரியுடன் இருந்ததால் கிராம மக்கள் குழப்பம் அடைந்தனர். புதிய ஆதார் கார்டுகளை சம்பந்தப்பட்டவர்களிடம் வழங்காமல், ஆற்றங்கரையில் கொட்டியிருப்பதற்கான காரணத்தை அறியாத கிராம மக்கள் இதுகுறித்து திருத்துறைப்பூண்டி காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். 

தகவலின் பேரில் அங்கு சென்ற திருத்துறைப்பூண்டி காவல் துறையினர், ஆதார் கார்டுகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். ஏதாவது மோசடி செய்வதற்காக இந்த ஆதார் கார்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக அருகில் உள்ள கத்திப்பட்டி காவல் நிலையத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக திருத்துறைப்பூண்டி போலீசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் 18 ஆம் தேதி மக்களவைத் தேர்தலுடன், திருவாரூர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. திருவாரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திமுக தலைவர் கருணாநிதி மறைவை அடுத்து, அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.  

NEXT STORY
ஆற்றின் கரையில் கொட்டிக்கிடந்த ஆயிரக்கணக்கான ஆதார் கார்டுகள்! Description: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் ஆற்றின் கரையில் ஆயிரக்கணக்கான ஆதார் கார்டுகள் கொட்டிக் கிடந்ததால் கிராம மக்கள் அதிர்ச்சி
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola