ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா லத்தீப் மர்ம மரணம்: உரிய விசாரணை நடத்திடுக - வைகோ

தமிழகம்
Updated Nov 14, 2019 | 18:51 IST | Times Now

தமிழ்நாட்டின் தலைநகரில் ஐ.ஐ.டி. இருந்தாலும், அதன் இருப்பும் செயல்பாடும் மர்மத்தீவு போலவே அமைந்துள்ளது - வைகோ

MDMK Chief vaiko
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ   |  Photo Credit: Twitter

சென்னை: மாணவி பாத்திமாவின் மர்ம மரணம் குறித்து காவல் துறையினர் நியாயமாக விசாரணை நடத்தி, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளா் வைகோ வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், "கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்தவர் மாணவி பாத்திமா லத்தீப். சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் உள்ள சராயு பெண்கள் விடுதியில் தங்கி, முதலாம் ஆண்டு எம்.ஏ. மானுடவியல் படித்து வந்த இவர், தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதற்காக கடந்த கடந்த 8 ஆம் தேதி தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக செய்தி வெளியானது.

தன் பேராசிரியர்கள் சிலர்தான் இதற்குக் காரணம் என்று பாத்திமாவின் செல்போனில் இருந்து எடுக்கப்பட்ட ஆதாரங்கள் அதிர்ச்சியைத் தருகின்றது. பாத்திமாவின் மரணம் குறித்து உதவி வேண்டி பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப் கேரள முதல்வரின் உதவியை நாடியுள்ளார்.

மேலும், மாணவி பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப் ஊடகத்தினரிடம் பேசுகையில், “தன் மகள் கடினமான பாடங்கள் காரணமாக மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலை செய்து கொள்ளவில்லை. ஏனென்றால், கடைசியாக நடந்த தேர்வில் என் மகள்தான் வகுப்பில் முதலிடம். பாத்திமாவின் செல்போனை ‘ஆன்’ செய்தபோது ஸ்கீரின் சேவரில் தன் டேப்லெட்டை பார்க்குமாறு கூறப்பட்டிருந்தது. அதில், என் மகளுக்கு நெருக்கடி கொடுத்த பேராசிரியர்கள் பெயர் குறிப்பிடப்பட்டிருந்து. என் மகள் தற்கொலைக்கு அவர்கள்தாம் காரணம்'' என்று குற்றம் சாட்டியுள்ளார்

“பாத்திமா எல்லோரிடமும் நன்றாகப் பழகும் மாணவி. துடிப்பானவர். வகுப்பில் கேள்விகளுக்கு உடனே பதில் சொல்வார். அவருக்கு எல்லோரிடமும் நல்ல நட்பு இருந்தது. ஏன் அவர் தற்கொலை செய்துகொண்டார் என எங்களுக்குத் தெரியவில்லை” என்று மானுடவியல் துறை தலைவர் உமாகாந்த் தாஸ் தெரிவித்துள்ளார்.

ஐ.ஐ.டி.யில் கடந்த பத்து ஆண்டுகளில் மொத்தத்தில் 52 மாணவ - மாணவிகள் தற்கொலை செய்துகொண்டு உள்ளனர் என்று ஆங்கில நாளேட்டில் வெளியான செய்தி மனதைப் பதற வைக்கிறது. 2016- ம் ஆண்டு முதல் தற்போது வரை 9 மாணவ - மாணவிகள் சென்னை ஐ.ஐ.டி-யில் தற்கொலை செய்துள்ளனர். இந்த ஆண்டில் தற்கொலை செய்து கொண்ட மூன்றாவது மாணவி பாத்திமா.

இதற்கு முன்னதாக, கடந்த ஜனவரி மாதத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சனா குமாரியும், உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த எம்.டெக் மாணவர் கோபால் பாபுவும் தற்கொலை செய்து கொண்டனர். ஐ.ஐ.டி தற்கொலைகளைக் காவல்துறையினர் முறையாக விசாரிப்பதில்லை என்று கூறப்படுகிறது. பாத்திமா இறப்பிலும் தமிழ்நாடு காவல்துறை, எதையோ மூடி மறைப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயனிடத்தில் கொடுத்த புகார் மனுவில் பாத்திமாவின் தந்தை லத்தீப் தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் மட்டுமல்ல; பேராசிரியர்களும் ஐ.ஐ.டி-யில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் துணைப் பேராசிரியர் அதிதி ஷர்மா, குடும்பப் பிரச்சினை காரணமாக விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டதாகச் சொல்லப்பட்டது. பேராசிரியர்களின் அணுகுமுறை மாணவர்களுக்கு அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாகச் சொல்லப்படுகிறது. ஐ.ஐ.டியில் நடக்கும் தற்கொலைகளைத் தடுக்க மாணவர்களுக்குக் கவுன்சலிங் கொடுக்கப்படுகிறது. மனநல மருத்துவர்களும் அறிவுரைகள் வழங்குகின்றனர். எனினும், பலன் அளிக்காமல் ஐ.ஐ.டி வளாகத்தில் தொடர்ச்சியாகத் தற்கொலைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

கொல்லத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த பாத்திமாவின் தாயார், ''என் மகளுக்கு பனாரஸ் பல்கலைக்கழகத்தில் படிக்க இடம் கிடைத்தது. வட மாநிலங்களில் இன ரீதியாக நடைபெறும் சம்பவங்கள் என்னை பயமுறுத்தின. அதனால், என் மகளை அங்கே படிக்க அனுப்பவில்லை. தமிழ்நாடு பாதுகாப்பானது என்றுதான் அனுப்பி வைத்தேன். ஆனாலும் இப்படி நடந்துவிட்டது'' என்று கதறியுள்ளார்.

தமிழ்நாட்டு மாணவர்கள், பிற மாநிலக் கல்வி நிலையங்களில் மர்ம மரணங்களுக்கு உள்ளாகும்போது, நமக்கு ஏற்படும் பதைப்பும் துடிப்பும், மாணவி பாத்திமாவின் சோகமான உயிரிழப்பிலும் ஏற்படுகிறது. தமிழ்நாட்டின் தலைநகரில் ஐ.ஐ.டி. இருந்தாலும், அதன் இருப்பும் செயல்பாடும் மர்மத்தீவு போலவே அமைந்துள்ளது.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்கிற தமிழ் மறையாம் திருக்குறள் காட்டும் சமூகநீதிக்கு எதிரான சாதி - மத பேதம் கொண்ட சனாதனப் போக்கு, கல்விப் பணியில் ஈடுபட்டிருக்கும் சிலரின் மனதில் குடிகொண்டிருப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுகின்றன. அதன் அடிப்படையில் மாணவர்கள் நடத்தப்படுவதும் இத்தகைய விபரீத விளைவுகளுக்குக் காரணமாகி விடுகின்றது. வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தில் இப்படிப்பட்ட நிகழ்வு நடந்திருப்பது மிகவும் கண்டிக்கத் தக்கது.
மாணவி பாத்திமாவின் மர்ம மரணம் குறித்து காவல் துறையினர் நியாயமாக விசாரணை நடத்தி, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்துகிறேன்" இவ்வாறு வைகோ கூறியுள்ளாா். 

NEXT STORY