திருவள்ளுவர் சிலை மீண்டும் அவமதிப்பு: தொடரும் அவலநிலை; வைகோ கண்டனம்

தமிழகம்
Updated Nov 07, 2019 | 15:04 IST | Times Now

தமிழகத்தில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்படும் நிலை தொடர்வது கடும் கண்டனத்துக்கு உரியது - வைகோ

MDMK chief Vaiko
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ   |  Photo Credit: Twitter

சென்னை: திருவள்ளுவர் சிலையை சேதப்படுத்துபவர்கள் மீது தயவு தாட்சண்யம் இன்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளா்  வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக வைகோ இன்று வெளியிட்ட அறிக்கையில், "நவம்பர் 3 ஆம் தேதி, தஞ்சையை அடுத்த பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டது. அதற்குக் காரணமானவர்களைக் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழகமே கொந்தளித்துள்ள நிலையில், இன்று மீண்டும் திருவள்ளுவர் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ள தகவல் வேதனை தருகிறது.

இன்று தேனி மாவட்டம், பெரியகுளம் தென்கரை பகுதியில் திருவள்ளுவர் சிலை மீது யாரோ சிலர் மர்மப் பொருளை வீசி உள்ளனர். இதனால் சிலையின் ஒரு பகுதி சேதம் அடைந்துள்ளது.

தமிழகத்தில் திருவள்ளுவர் சிலை இதுபோன்று அவமதிக்கப்படும் நிலை தொடர்வது கடும் கண்டனத்துக்கு உரியது. இத்தகைய இழி செயலில் ஈடுபடுவோரைக் கைது செய்து காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் ஒரு பதற்ற நிலையை ஏற்படுத்தத் திட்டமிட்டு, திருவள்ளுவருக்குக் காவி உடை அணிவித்து மதச் சாயம் பூசுவதும், சில இடங்களில் பால் அபிஷேகம் செய்து வழிபாடு நடத்துவதும் மதவாத சனாதன சக்திகளின் நோக்கத்தை வெளிப்படுத்துகிறது. தமிழக அரசு இத்தகைய சமூக விரோத கும்பல் மீது தயவு தாட்சண்யம் இன்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என வைகோ வலியுறுத்தியுள்ளார்.

NEXT STORY