’’இந்த ஆட்சி முடிவை நோக்கிதான் சென்றுகொண்டு இருக்கிறது’’ - டிடிவி தினகரன்

தமிழகம்
Updated May 26, 2019 | 13:43 IST | ANI

இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன் எப்படி 300 வாக்குச்சாவடிகளில் பூஜ்யம் ஓட்டுக்கள் வந்திருக்க முடியும்? எங்கள் முகவர்கள்கூடவா வாக்களிக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

TTV Dinkaran press meet
TTV Dinkaran press meet  |  Photo Credit: ANI

நடைபெற்ற இடைத்தேர்தல், மக்களவைத் தேர்தலில் ஒரு இடங்களில் கூட அமமுக கட்சி வெற்றிபெறவில்லை. தேர்தல் முடிவுக்குப் பிறகு சென்னையில் இன்று அக்கட்சியின் தலைவர் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார்.

நடந்த சந்திப்பில் அவர் கூறியதாவது,  ‘’தேர்தல் முடிவுகள் வந்த அன்றே நான் ட்விட்டர் பக்கத்தில் மக்களின் தீர்ப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறிவிட்டேன். ஆனால் என் கேள்வி என்னவென்றால் சுமார் 300 பூத்களில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பூஜ்ஜியம் வாக்குகளை பெற்று இருப்பதாக கணக்குகள் வருகிறது. மக்கள் வாக்களிக்கவில்லை என்று வைத்துக்கொண்டாலும் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் முகவர்கள் எங்களுக்கு இருக்கிறார்கள். அவர்கள் 4 பேர் ஓட்டளித்து 4 வாக்குகள் ஆவது வரவேண்டும் அல்லவா,  எப்படி ஒரு ஓட்டு கூட பதிவு ஆகாமல் இருக்க முடியும்? இதனைத் தேர்தல் ஆணையம்தான் விளக்கம் அளிக்க வேண்டும்.   இன்னும் சொல்லப் போனால் என் சொந்த வாக்குச்சாவடியிலேயே வெறும் 14 வாக்குகள்தான் பதிவாகி இருக்கிறது. என்னுடைய குடும்பத்தார், நண்பர்கள் அனைவரும் சேர்ந்து போட்டால்கூட 100 வாக்குகளாவது வரவேண்டும். அப்படி இருக்கையில் எப்படி 14 வாக்குகள் மட்டும் பதிவாகி இருக்க முடியும்? என்று கேள்வியெழுப்பினார். 

பின் செய்தியாளர்கள் அதிமுக 9 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைத்தது பற்றி கேள்வி கேட்டதற்கு, ’’ அவர்கள் வெற்றி பெற்ற 9 தொகுதியிலும் கிட்டத்தட்ட தோற்றவர்கள் நெருக்கமாகத்தான் வந்திருக்கிறார்கள். அரசியலில் எதுவும் நடக்கும் என்பதால் அவர்கள் வெற்றி பெற்று இருக்கிறார்கள் , 37 இடங்களை கைப்பற்றிய திமுக தேனியில் மட்டும் எவ்வாறு தோற்றது? தேனியில் அதிமுகவை ஜெயிக்க வைத்தது யார்? இதெல்லாம் நீங்கள்தான் யோசித்துப் பார்க்க வேண்டும். இந்த தேர்தலில் வெற்றியும் தோல்வியும் எங்களுடைய பணியை எந்தவிதத்திலும் பாதிக்காது எங்களுடைய பணியை நாங்கள் சிறப்பாக தொடர்வோம். இன்னும் எத்தனையோ தேர்தலை சந்திக்க இருக்கிறோம்.  சென்ற முறை திமுக 37 இடங்களில் தோற்றது,  ஆனால் இந்த முறை 37 இடங்களை கைப்பற்றி இருக்கிறது. அரசியலில் எதுவும் நிரந்தரமில்லை, எப்போதும் எதுவேண்டுமானாலும் மாறும், இந்த ஆட்சி, முடிவை நோக்கிதான் போய்க் கொண்டு இருக்கிறது என்பது நன்றாகத் தெரிகிறது. நீங்களும் அதனைப் பார்க்கத்தான் போகிறீர்கள். தேர்தலில் மக்கள் எங்களுக்கு கொடுத்த முடிவை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் வரும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுப்போம்’’ என்று கூறினார். 

NEXT STORY
’’இந்த ஆட்சி முடிவை நோக்கிதான் சென்றுகொண்டு இருக்கிறது’’ - டிடிவி தினகரன் Description: இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன் எப்படி 300 வாக்குச்சாவடிகளில் பூஜ்யம் ஓட்டுக்கள் வந்திருக்க முடியும்? எங்கள் முகவர்கள்கூடவா வாக்களிக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
Loading...
Loading...
Loading...