''அ.தி.மு.கவை மீட்டெடுத்தே தீருவோம்'' - அதிமுக தொடக்க நாளில் தினகரன் சூளுரை

தமிழகம்
Updated Oct 16, 2019 | 16:16 IST | Times Now

அஇஅதிமுக தொடக்க தினத்தை முன்னிட்டு டிடிவி தினகரன் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

TTV Dhinakaran, டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்  |  Photo Credit: Twitter

சென்னை: ’’அதிமுகவை மீட்டே தீருவோம்’’ என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சூளுரைத்துள்ளார்.

அஇஅதிமுக தொடக்க தினத்தை முன்னிட்டு டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: ”அம்மா உருவாக்கிய ஆட்சியையும், அவர் கட்டிக்காப்பாற்றிய இயக்கத்தையும் தியாகத்தலைவி சின்னம்மா சேதாரமின்றி காப்பாற்றினார். தன் சொந்த நலன் பாராது தமிழ்நாட்டின் நலனை மனதில் வைத்து அம்மா அவர்களின் ஆட்சியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைத்தார். ஆனால், துரோகமே வடிவான இந்த சூது மதியாளர்கள், ஆட்சியையும், கட்சியையும் தங்களின் சுய லாபத்திற்காக அடகு வைத்து, சிங்கமென நிமிர்ந்து நின்று, எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த அம்மா அவர்களின் புகழுகும், பெருமைக்கும் களங்கம் ஏற்படுத்திவிட்டார்கள். 

அம்மா அவர்கள் தமிழக மக்களின் நலன் கருதி எதிர்த்த திட்டங்களுக்கு எல்லாம் தங்களின் சுயநலத்திற்காக தலைவாசலைத் திறந்துவிட்டு தமிழ்நாட்டிற்கு துரோகம் இழைத்தார்கள். இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில்தான் அம்மாவின் இயக்கத்தையும், அம்மா அவர்கள் போற்றிப் பாதுகாத்த தமிழ்நாட்டின் நலன்களையும் மீட்டெடுக்க வேண்டிய பெரும் பொறுப்பைக் காலம் நம்முடைய கைகளில் வழங்கியது.

எப்போதுமே சுயநலமிக்க சில தனி நபர்களை நம்பி நம்முடைய இயக்கம் (அமமுக) இருந்ததில்லை, உண்மையான உணர்வும், வழி வழியாக தீய சக்திகளுக்கு எதிரான ரத்தம் உடலில் ஓடுகிற நெஞ்சுரமும் கொண்ட தொண்டர்களால் உருவாக்கப்பட்டு, அவர்களால் வழி நடத்தப்படுகிற இந்த இயக்கத்தை, அற்ப ஆசைகளுக்காக தாவியோடுகிற யாரோ சிலரின் துரோகத்தால் எதுவும் செய்துவிட முடியாது. இன்னும் சொல்லப்போனால், அதன் பிறகு தான் இயக்கம் தூய்மை அடைந்திருக்கிறது.” இவ்வாறு டிடிடி தினகரன் கூறினார்.

 

 

”அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்” எனும் எம்ஜிஆர் பாடல் வரிகளை மேற்கோள் காட்டிய தினகரன் மேலும் கூறியதாவது, ”ஏகாதிபத்திய சக்திகள் அளிக்கின்ற பொம்மை அதிகாரம் போன பிறகு துரோகிகளை அண்டி நிற்பதற்கு அவர்களின் நிழல் கூட தயங்கும். அந்த நிலை வரும் நாள் வெகுதொலைவில் இல்லை. துரோகிகள் கொடுத்த இடத்தை பயன்படுத்திக் கொண்டு, அம்மா அவர்களால் அடக்கப்பட்ட தீயசக்தியின் நவீன வடிவம், எப்படியாவது பதவியில் வந்து உட்கார்ந்துவிடத் துடிக்கிறது. இயக்கத்திற்காக என்பதை தாண்டி, தமிழ்நாட்டு நலனுக்காக தீயசக்தி கூட்டத்தின் கெட்ட கனவைப் பலிக்க விடாமல் செய்ய வேண்டிய கடமையும் நம்முடைய கரங்களில் இருக்கிறது என்பதை கழக உடன்பிறப்புகள் ஒரு கணமும் மறந்திடலாகாது.” இவ்வாறு தினகரன் கூறினார்.

NEXT STORY