ஃபீனிக்ஸ் பறவையைப் போல் மீண்டும் எழுந்து நிற்போம் - டிடிவி தினகரன்

தமிழகம்
Updated May 23, 2019 | 20:31 IST | Times Now

நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் தமிழக மக்கள் அளித்த தீர்ப்புக்குத் தலை வணங்குகிறோம் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்  |  Photo Credit: Twitter

சென்னை: ஃபீனிக்ஸ் பறவையைப் போல மீண்டும் எழுந்து நிற்போம் என தேர்தல் தோல்வி குறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கருத்துத் தெரிவித்துள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து 38 தொகுதிகளில் அமமுக வேட்பாளர்களை களம் இறக்கியது. தென் சென்னை தொகுதியில் மட்டும் கூட்டணி கட்சியான எஸ்டிபிஐ போட்டியிட்டது.  அதேபோல், 22 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களிலும் அமமுக வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இத்தொகுதிகளில் பதிவான வாக்கு எண்ணிக்கை இன்று நடந்த நிலையில், அமமுக எந்த தொகுதியிலும் முன்னிலை பெறவில்லை. சில தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சியை விட குறைவான வாக்குகளை பெற்று 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டது அமமுக.

குறிப்பாக சட்டமன்ற இடைத்தேர்தலில் அக்கட்சிக்கு செல்வாக்கு உள்ளதாக கூறப்பட்ட தொகுதியில் கூட பெரிய அளவில் வாக்குகளை பெறவில்லை. இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் தமிழக மக்கள் அளித்த தீர்ப்புக்குத் தலை வணங்குகிறோம் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக ட்விட்டரில் தினகரன் பதிவிட்டுள்ளதாவது: மக்கள் தீர்ப்புக்குத் தலைவணங்குகிறோம்! 
நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் தமிழக மக்கள் அளித்த தீர்ப்புக்குத் தலை வணங்குகிறோம். தேர்தல் அரசியலில் வெற்றி – தோல்வி என்பது இயல்பானது.

எத்தனையோ இன்னல்களுக்கும், இடையூறுகளுக்கும் இடையே கழகம் காக்க, மக்கள் பணியாற்ற சுயேச்சைகளாக களமிறங்கியவர்களுக்கும், இரவு- பகல் பார்க்காமல் உழைத்த கழக உடன்பிறப்புகளுக்கும்,  கழகத்திற்கு வாக்களித்து ஆதரவளித்த நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன்.

இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கற்றுத்தந்த துணிவோடு, ஃபீனிக்ஸ் பறவையைப் போல மீண்டும் எழுந்து நிற்போம். தூய்மையான அன்போடு தமிழ்நாட்டு மக்களின் மனங்களை முழுமையாக வென்றெடுக்க தொடர்ந்து பாடுபடுவோம். தமிழகத்தின் உரிமைகளுக்காக அமமுகவின் குரல் எப்போதும் போல ஓங்கி ஒலித்திடும்.

NEXT STORY
ஃபீனிக்ஸ் பறவையைப் போல் மீண்டும் எழுந்து நிற்போம் - டிடிவி தினகரன் Description: நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் தமிழக மக்கள் அளித்த தீர்ப்புக்குத் தலை வணங்குகிறோம் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
Loading...
Loading...
Loading...