சென்னை: ஐ.ஐ.டி உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் நிகழும் மாணவர் தற்கொலைகளைத் தடுக்க உரிய செயல் திட்டம் வகுக்கப்பட வேண்டும் என அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளாா்.
சென்னை ஐஐடியில் முதலாமாண்டு முதுகலை வகுப்பில் பயின்று வந்த கேரளாவைச் சேர்ந்த பாத்திமா லத்தீப் என்ற மாணவி கடந்த சனிக்கிழமை ஐஐடி வளாகத்தில் உள்ள தனது விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் மாணவர்கள் மத்தியில் அதிர்வலைய கிளப்பியுள்ளது. மாணவி பாத்திமா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், இந்த வழக்கு தொடர்பான விசாரணையை தீவீரப்படுத்த வேண்டும் என்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்நிலையில், இன்று இந்த வழக்கு சம்பந்தமாக சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சென்னை ஐஐடி வளாகத்தில் விசாரணை மேற்கொண்டார். அதன் பின்னா் செய்தியாளர்களிடம் பேசிய ஏ.கே.விஸ்வநாதன், இந்த வழக்கின் விசாரணை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இந்நிலையில், மாணவி தற்கொலை குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பதிவில், "கேரள மாநிலத்தைச் சேர்ந்த பாத்திமா லத்தீப் சென்னை ஐஐடி-யில் படித்து வந்தாா். சென்னை ஐஐடியில் மாணவி ஃபாத்திமா தற்கொலை செய்து கொண்டிருக்கிற நிகழ்வு மிகுந்த வேதனை அளிக்கிறது. முறையான விசாரணை நடத்தி இதற்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
ஐ.ஐ.டி உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் நிகழும் இத்தகைய மாணவர் தற்கொலைகளைத் தடுக்க உரிய செயல் திட்டம் வகுக்கப்பட வேண்டும். மன அழுத்தங்களையும், சவால்களையும் மாணவச் செல்வங்கள் தன்னம்பிக்கையோடு எதிர்கொண்டு படிப்பதற்கான சூழலை உருவாக்கித் தர வேண்டும். இதற்காக மாணவர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் தேவையான கவுன்சிலிங் மற்றும் பயிற்சிகள் வழங்கப்படவேண்டும் என வலியுறுத்துகிறேன்" என்று தினகரன் கூறியுள்ளாா்.