100 அடி ஆழ கிணற்றுக்குள் லோடு ஆட்டோ கவிழ்ந்து விபத்து: 8 பேர் பலி

தமிழகம்
Updated Aug 18, 2019 | 19:56 IST | Times Now

திருச்சி அருகே லோடு ஆட்டோவின் டயர் வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் கோயில் திருவிழாவுக்குச் சென்று திரும்பிய 8 பேர் உயிரிழந்தனர்.

Mini van Accident near Trichy
Mini van Accident near Trichy  |  Photo Credit: YouTube

திருச்சி: திருச்சி அருகே பாலடைந்த கிணற்றுக்குள் லோடு ஆட்டோ விழுந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர். 9 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி மாவட்டம் முசிறி அருகே பேரூரைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் டாடா ஏஸ் வாகனத்தில் கோயில் திருவிழாவுக்கு சென்றுவிட்டு ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். அவர்கள் பயணம் செய்த வாகனம் துறையூரை அடுத்த எஸ்.எஸ்.புதூர் அருகே வந்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அந்த வாகனத்தின் டயர் வெடித்தது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையின் ஓரத்தில் உள்ள பாழடைந்த ஆழமான கிணற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. 

தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் கிணற்றில் இருந்து அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் இதுவரை 3 குழந்தைகள், 4 பெண்கள் உள்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் படுகாயத்துடன் மீட்கப்பட்டவர்கள் துறையூர் மற்றும் திருச்சி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 8 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

விபத்தில் உயிரிழந்தவரின் விவரம்:

1.குணசீலன் (ஆண்)
2.குமாரத்தி (பெண்)
3.சரண்குமார் (குழந்தை)
4.கோமதி (பெண்)
5.கயல்விழி (பெண்)
6.எழிலரசி (பெண்)
7.சஞ்சனா (குழந்தை)
8 யமுனா (குழந்தை)


 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...