சென்னை: 2020 ஆம் ஆண்டு 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை தமிழக அரசுத் தேர்வுகள் இயக்ககம் இன்று வெளியிட்டுள்ளது. இதில், தேர்வுகள் தொடங்கும் தேதிகள், முடிவடையும் தேதிகள் மற்றும் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அனைத்து மாணவர்களும் எவ்வித மன அழுத்தமும் இன்றி, தேர்வு எழுதுவதற்கு ஆசிரியர்கள் முன்னதாகவே மாணவர்களை தயார் செய்யும் வகையில் முன்கூட்டியே தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
2020 ஆம் ஆண்டுக்கான 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 3 ஆம் தேதி தொடங்கி, மார்ச் 24 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்வு முடிவுகள் ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
11ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 4 ம் தேதி தொடங்கி, மார்ச் மாதம் 26 ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மே மாதம் 14 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
10ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 17 ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 9 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் மே மாதம் 4 ஆம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.