தமிழக அரசு வாங்கியுள்ள பேருந்துகளில் அவசர வழி, தீ அணைப்பான் ஆகியவை எல்லாம் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் எழுதப்பட்டுள்ளதாக கடும் கண்டனங்கள் எழுந்தன. இதுபற்றி போக்குவரத்துத் துறை, அந்தப் பேருந்துகள் வெளி மாநிலத்தில் இருந்து வாங்கப்பட்டதால் இந்தி மற்றும் ஆங்கில மொழி இருந்தன, தற்போது அவை நீக்கப்பட்டன என்று விளக்கம் கொடுத்துள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துறை சார்பில் 500 புதிய பேருந்துகள் சமீபத்தில் வாங்கப்பட்டன. இந்த பேருந்துகளின் சேவையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு 150 பேருந்துகள், சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்திற்கு 100 பேருந்துகள், விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகத்திற்கு 10 பேருந்துகள், கோவைக்கு 30 பேருந்துகள், கும்பகோணத்திற்கு 110 பேருந்துகள், மதுரைக்கு 50 பேருந்துகள், நெல்லைக்கு 30 பேருந்துகள் என மொத்தம் 500 புதிய பேருந்துகள் பிரித்து அனுப்பப்பட்டுள்ளன.
விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் புதிதாக இயக்கப்பட்ட பேருந்துகளில் அவசர வழி, தீ அணைப்பான் ஆகியவை எல்லாம் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் எழுதப்பட்டுள்ளது. இதற்கு திமுக எம்.பி.கனிமொழி உட்பட பலரும் கண்டனம் தெரிவித்து அறிக்கை விட்டனர். இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள தமிழகப் போக்குவரத்துத் துறை, வெளி மாநிலத்தில் இருந்து இந்த பேருந்துகளை இறக்குமதி செய்துள்ளோம், அதனால் அதில் இந்தி மற்றும் ஆங்கிலம் கொண்ட ஸ்டிக்கர் டீ-ஃபால்ட்டாக இருந்தது உண்மைதான். ஆனால் பயணிகளின் சேவைக்காக அனுப்பப்படுவதற்கு முன்னரே இந்த ஸ்டிக்கர்கள் அனைத்தும் நீக்கப்பட்டு விட்டன. தற்போது எந்தப் பேருந்திலும் இந்தி மொழி ஸ்டிக்கர்கள் இல்லை என தெரிவித்துள்ளது.