தந்தை பெரியாரின் 141-வது பிறந்தநாள்: தலைவர்கள் மரியாதை

தமிழகம்
Updated Sep 17, 2019 | 11:17 IST | Times Now

தந்தை பெரியாரின் பிறந்த தினமான செப்டம்பர் 17-ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

DMK President MK Stalin pays respect to Thanthai Periyar, தந்தை பெரியார் உருவப்படத்திற்கு மு.க.ஸ்டாலின் மரியாதை
தந்தை பெரியார் உருவப்படத்திற்கு மு.க.ஸ்டாலின் மரியாதை  |  Photo Credit: Twitter

சென்னை: தந்தை பெரியாரின் 141ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணாசாலையில் அவரது உருவச்சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்ட உருவப்படத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தமிழக அமைச்சர்கள் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தந்தை பெரியாரின் பிறந்த தினமான செப்டம்பர் 17-ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. வெங்கடப்ப நாயக்கர்- சின்னத்தாயம்மாள் தம்பதியருக்கு 1879-ஆம் ஆண்டு ஈ.வெ.இராமசாமியாக பிறந்தார் தந்தை பெரியார். 13 நவம்பர் 1938-ல் சென்னையில் நடைபெற்ற தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டில் ஈ.வெ.இராமசாமி அவர்களுக்கு ‘பெரியார்’ என பட்டம் வழங்கப்பட்டது. கேரள மாநிலத்தில் தீண்டாமையை எதிர்த்து போராடிய இவரை ’வைக்கம் வீரர்’ என்றும் அழைப்பர். 

பகுத்தறிவுப் பகலவன் எனப் போற்றப்படும் தந்தை பெரியாரின் வரலாறு தமிழக அரசியல் வரலாற்றுடன் கலந்ததாகும். 1920-ஆம் ஆண்டு காந்தியடிகள் மீது பற்றுகொண்டு காங்கிரசில் சேர்ந்தார். 1925-ஆம் ஆண்டு காங்கிரசை விட்டு வெளியேறி ‘குடியரசு’ வார இதழை தொடங்கினார். அதில், சாதி ஒழிப்பு, கலப்புமணம், கைம்பெண் மறுமணம், புராண எதிர்ப்பு குறித்து கட்டுரைகள் எழுதினார். 1944-ல் நீதிக்கட்சியினை திராவிடர் கழகமாக மாற்றினார். 24 டிசம்பர் 1973 அன்று தந்தை பெரியார் இயற்கை எய்தினார்.

 

 

தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலை சிம்சன் சந்திப்பில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது உருவப்படத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். திமுக சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோரும் பெரியாரின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

NEXT STORY