தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100 சதவிகிதம் வரிவிலக்கு!

தமிழகம்
Updated Sep 16, 2019 | 17:47 IST | Times Now

அனைத்து மின்சார இருசக்கர வாகனங்கள், கார்கள், மூன்று சக்கர வாகனங்கள், பேருந்துகள் மற்றும் இலகு ரக சரக்கு வாகனங்கள் ஆகியவற்றுக்கு 100 சதவிகித மோட்டார் வாகன வரி விலக்கு வழங்கப்படும்.

Edappadi K Palaniswami, MC Sampath, MR Vijayabhaskar, முதல்வர் பழனிசாமி வெளியிட அமைச்சர்கள் எம்.சி.சம்பத், எம்.ஆர்.விஜயபாஸ்கர் பெற்றுக்கொண்டனர்
முதல்வர் பழனிசாமி வெளியிட அமைச்சர்கள் எம்.சி.சம்பத், எம்.ஆர்.விஜயபாஸ்கர் பெற்றுக்கொண்டனர்  |  Photo Credit: Twitter

சென்னை: தமிழ்நாடு மின்சார வாகன கொள்கை 2019 இன்று வெளியிடப்பட்டது. அதன்படி, அனைத்து மின்சார இருசக்கர வாகனங்கள், கார்கள், மூன்று சக்கர வாகனங்கள், பேருந்துகள் மற்றும் இலகு ரக சரக்கு வாகனங்கள் ஆகியவற்றுக்கு 100 சதவிகித மோட்டார் வாகன வரி விலக்கு வழங்கப்படும். 2022 வரை இந்த வரி விலக்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார வாகனங்கள், அதன் உதிரி பாகங்கள், மின்கலம் மற்றும் மின் ஏற்று உபகரணங்கள் உற்பத்தி செய்வோருக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படும். ரூ.50 கோடிக்கு மேல் முதலீடு செய்தும், குறைந்தபட்சம் 50 நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள் பின்வரும் சலுகைகள் பெற தகுதிபெறும்:

  • தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் மின்சார வாகனங்களுக்கான மாநில சரக்கு மற்றும் சேவை வரி 100 சதவிகிதம் திரும்ப வழங்கப்படும். இச்சலுகை 2030-ஆம் ஆண்டு வரை வழங்கப்படும்.
  • மின்சார வாகனங்கள் உற்பத்திக்கான முதலீடுகள் 15 சதவிகிதம் வரையும், மின்கலன் உற்பத்திக்கான முதலீடுகளுக்கு 20 சதவிகிதம் வரையும் மானியம் வழங்கப்படும். இந்த சலுகை 2025-ஆம் ஆண்டு வரை செய்யப்படும் முதலீடுகளுக்கு பொருந்தும்.
  • அரசு தொழிற் பூங்காக்களில் மின்சார வாகனங்கள், மின் ஏற்று உபகரணங்கள் மற்றும் மின்கலன்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை அமைக்க முன்வரும் நிறுவனங்களுக்கு நிலத்தின் விலையில் 20 சதவிகிதம் வரை மானியமாக வழங்கப்படும். தென் மாவட்டங்களில் செய்யப்படும் இவ்வகை முதலீடுகளுக்கு நிலத்தின் மதிப்பில் 20 சதவிகிதம் மானியமாக வழங்கப்படும். இந்த சலுகை 2022-ஆம் ஆண்டு வரை செய்யப்படும் முதலீடுகளுக்கு பொருந்தும்.
  • மின்சார வாகனங்கள் மற்றும் மின் ஏற்று உபரகரணங்கள் உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்கள் தொழிற்சாலை அமைக்க நிலம் வாங்கும் போது 100 சதவிகித முத்திரைத்தாள் கட்டண விலக்கு அளிக்கப்படும். இந்த சலுகை 2022-ஆம் ஆண்டு வரை செய்யப்படும் முதலீடுகளுக்கு பொருந்தும்.
  • மின்சார வகனங்கள் மற்றும் மின் ஏற்று உபகரணங்கள் உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்களுக்கு 100 சதவிகித மின்சார வரி விலக்கு அளிக்கப்படும்.
  • மின்சார வாகனங்கள் மற்றும் மின் ஏற்று உபகரணங்கள் உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்கள் 2025-ஆம் ஆண்டு வரை உருவாக்கும் ஒவ்வொரு புதிய வேலை வாய்ப்புக்கும், நிறுவனங்களின் பங்களிப்பாக செலுத்திய தொழிலாளர் சேமநல நிதிக்கு ஈடான தொகை மானியமாக வழங்கப்படும்.
  • மின்சார வாகனங்களுக்கான உதிரி பாகங்கள் மற்றும் மின் ஏற்று உபகரணங்கள் உற்பத்தியில் ஈடுபடும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு தற்போதுள்ள மூலதன மானிய திட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்டுள்ள தகுதி வரம்பை விட 20 சதவிகிதம் கூடுதல் மூலதன மானியம் வழங்கப்படும்.
  • வாகன உற்பத்தி மையங்களிலும், மின்சார வாகன உற்பத்தியில் முதலீடுகளை ஈர்க்கும் திறன் கொண்ட பகுதிகளிலும், அரசு சார்பில், பிரத்யேகமாக மின்சார வாகன உற்பத்தி தொழிற் பூங்காக்கள் உருவாக்கப்படும்.

உணவகங்கள், வணிக வாகனங்கள் மற்றும் திரையரங்குகள் போன்ற அனைத்து வணிக கட்டடங்களிலும் மின் ஏற்று வசதியை ஏற்படுத்துவது உறுதிசெய்யப்படும்.

அரசு போக்குவரத்து கழகங்கள் மின்சாரப் பேருந்துகளை வாங்குவதற்கு தேவையான நிதி உதவிகள் வழங்கப்படும். மூன்று சக்கர மின்சார வாகனங்களுக்கான திறந்த நிலை அனுமதி வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

மின்சார உற்பத்தி துறையில் புதிதாகத் துவங்கும் புத்தொழில்களுக்கு தனிக் கவனத்துடன் ஊக்கமளிக்கப்படும். புத்தொழில் கருவூக்க மையங்கள் மூலம் அலுவலக இடம், பொது வசதிகள் மற்றும் வழிகாட்டுதல் ஆதரவு போன்ற அனைத்து வசதிகளும் செய்துகொடுக்கப்படும்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு மின்சார வாகன கொள்கை 2019-ஐ வெளியிட தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். பல்வேறு துறைகளை சார்ந்த அரசு செயலாளர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

NEXT STORY