அடுத்த பயணம் இஸ்ரேலுக்கு! - புதிய தகவலை வெளியிட்டார் முதல்வர் பழனிசாமி

தமிழகம்
Updated Sep 10, 2019 | 12:19 IST | Times Now

"அயல்நாட்டு தொழில் முதலீட்டாளர்களை சந்திக்கும் போது அவர்கள் உடையில் இருந்தால் தானே அதற்கு ஒரு மரியாதை இருக்கும்?"

Tamil Nadu CM Edappadi K Palaniswami with Dubai industrialists, துபாய் தொழில் நிறுவனத்தினருடன் முதல்வர் பழனிசாமி
துபாய் தொழில் நிறுவனத்தினருடன் முதல்வர் பழனிசாமி  |  Photo Credit: Twitter

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது 13 நாள் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு தமிழகம் திரும்பியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: ''நீண்ட நாட்களாக தமிழகத்தில் இருந்து எந்த ஒரு முதலமைச்சரும் வெளிநாடு செல்லவில்லை என்ற குறைபாடு இருந்தது. அந்த குறைபாடை இப்பொழுது தீர்த்து வைத்திருக்கிறோம்.

அயல்நாட்டு தொழில் முதலீட்டாளர்களை சந்திக்கும் போது அவர்கள் உடையில் இருந்தால் தானே அதற்கு ஒரு மரியாதை இருக்கும்? நாம் தொழில் ஈர்ப்பதற்காக சென்றோம், நம் விருப்பத்தை அங்கு தெரிவிக்க அல்ல. அவர்களுடைய விருப்பத்தை நாம் பூர்த்தி செய்யவேண்டும்.

போடப்பட்ட ஒப்பந்தங்கள் அனைத்தும் குறுகிய காலத்திலேயே நடைமுறைக்கு வர இருக்கிறது. இன்னும் பலர் வர இருக்கின்றனர். (எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்) நான் முதல்வராக பதவியேற்றது முதல் எதிர்ப்புக் குரல் தான் கொடுக்கிறார். அவர் நினைத்ததெல்லாம் நடக்கவில்லை என்ற எரிச்சல் மற்றும் பொறாமையில் இப்படிப்பட்ட வார்த்தைகளை உதிர்க்கிறார்.

மற்ற அமைச்சர்களும் அவர்களது துறை சார்ந்த திட்டங்களை நிறைவேற்ற வெளிநாடு சென்றுள்ளனர். வெளிநாடுகளில் இருப்பது போன்ற நவீன சுற்றுலாத் தளங்கள் தமிழகத்தில் இல்லை. துபாய் போன்ற சிறிய நாடுகள் வளர்ந்ததற்குக் காரணம் சுற்றுலா தான். நம் நாட்டிலும் சுற்றுலாத்துறை வளர்ந்தால் தான் தொழில் முதலீட்டாளர்கள் அவர்கள் நாடுகளுக்கு அந்த தகவல்களை தெரியப்படுத்தி மேலும் முதலீடுகளை ஈர்க்க வழிசெய்வார்கள். 

அடுத்து இஸ்ரேல் செல்ல இருக்கிறேன். நாம் 1 ஏக்கருக்கு பாய்ச்சக்கூடிய நீரை 7 ஏக்கருக்கு அவர்கள் பயன்படுத்துகிறார்கள். கழிவுநீரை மறுசுழற்சி செய்து விவசாயத்திற்கு பயன்படுத்துகிறார்கள். தமிழகத்தில் சிலநேரம் பருவமழை பொய்த்துவிடுவதால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். அப்படி சிக்கனமாக பயன்படுத்தக் கூடிய நாடு இஸ்ரேல். எனவே அங்கு செல்ல இருக்கிறோம்.'' இவ்வாறு முதல்வர் பழனிசாமி கூறினார்.

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...