நாளை டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிச்சாமி: பிரதமரை சந்திக்கவும் திட்டம்!

தமிழகம்
Updated Jun 13, 2019 | 14:30 IST | Times Now

டெல்லியில் வரும் 15 ஆம் தேதி நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நாளை டெல்லி செல்ல உள்ளார்.

நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ள நாளை டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிச்சாமி
நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ள நாளை டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிச்சாமி  |  Photo Credit: Twitter

சென்னை: டெல்லியில் வரும் 15 ஆம் தேதி நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நாளை டெல்லி செல்ல உள்ளார். இந்த பயணத்தின்போது பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை நேரில் சந்தித்து அவர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று மோடி தலைமையில் மீண்டும் ஆட்சியமைத்துள்ளது. இந்நிலையில், புதிய அரசு பதவியேற்றபின் நிதி ஆயோக் கூட்டம் முதன்முறையாக நடைபெற உள்ளது. பிரதமர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கூட்டம் முடிவடைந்தபின் அன்று இரவு அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும், பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்து அளிக்க உள்ளார்.

இந்த கூட்டத்தில், கலந்துகொள்வதற்காக நாளை டெல்லி செல்ல உள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியுடன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் முக்கிய அதிகாரிகள் சிலரும் செல்ல உள்ளனர்.  

நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்டபின், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட முக்கிய மத்திய அமைச்சர்களையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

NEXT STORY