கருத்து கணிப்பு அல்ல; கருத்து திணிப்பு - முதல்வர் எடப்பாடி பழனிசாமி

தமிழகம்
Updated May 20, 2019 | 13:25 IST | Times Now

தமிழகத்தில் கருத்துக்கணிப்புகள் பொய்யாகும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Tamil Nadu Chief Minister Edappadi Palaniswami,தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி   |  Photo Credit: YouTube

சேலம்: தமிழகத்தில் அதிமுக கூட்டணி குறைவான இடங்களைளே வெற்றி பெறும் என்பது கருத்து கணிப்பு அல்ல; கருத்து திணிப்பு என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

மக்களவை தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் நேற்று மாலை வெளியாகின. இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் என அனைத்து ஊடகங்களும் கூறியுள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாகவும் கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் முடிவுகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் இன்று எழுப்பிய கேள்விக்கு, " தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தமிழகத்தில் அதிமுக கூட்டணி குறைந்த இடங்களை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது கருத்து கணிப்பு அல்ல, கருத்து திணிப்பு. அவை பொய்யாகும். 2016-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் சேலத்தில் நான் தோற்றுப்போவேன் என ஊடகங்களில் கருத்து கணிப்புகள் வெளியாகின.

ஆனால், 42,000 வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றி பெற்றேன். சேலத்தில் அதிமுக 3 இடங்களில் கூட வெற்றி பெறாது என கருத்து கணிப்புகள் கூறின. நாங்கள் 10 இடங்களில் வெற்றி பெற்றோம். எனவே அந்த கருத்துக்கணிப்புகள் பொய்யாகி போகின. அதேபோல் தமிழகத்தை பொறுத்தவரை தற்போதைய கருத்து கணிப்பை பொய்யாக்குவோம். புதுச்சேரி உள்பட 39 மக்களவை தொகுதிகள் மற்றும் 22 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களில் அதிமுக கூட்டணியே வெற்றி பெறும் என தெரிவித்தார்.

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும் என்று கருத்து கணிப்புகள் கூறியுள்ளது பற்றி கேட்டதற்கு பதிலளித்த முதல்வர், " தமிழகத்தை பற்றி மட்டுமே கருத்து கூற முடியும், மற்ற மாநிலங்களை பற்றி கருத்து கூற இயலாது. நாங்கள் தமிழக அளவில் அரசியல் செய்கிறோம். தேசிய அளவில் கருத்து கணிப்புகள் குறித்து கருத்து கூற முடியாது" என்று பதிலளித்தார்.
 

NEXT STORY
கருத்து கணிப்பு அல்ல; கருத்து திணிப்பு - முதல்வர் எடப்பாடி பழனிசாமி Description: தமிழகத்தில் கருத்துக்கணிப்புகள் பொய்யாகும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Loading...
Loading...
Loading...