திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர். பாலு, துணை தலைவராக கனிமொழி தேர்வு

தமிழகம்
Updated May 25, 2019 | 19:57 IST | Times Now

மக்களவை திமுக பொருளாளராக பழனி மாணிக்கம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

DMK parliamentary party meeting
திமுக எம்.பிக்கள் கூட்டம்  |  Photo Credit: YouTube

சென்னை: திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர். பாலு, துணை தலைவராக கனிமொழி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுக, காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில், 19 இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது.

இவை தவிர திமுக சின்னத்தில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ரவிக்குமார், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியைச் சேர்ந்த சின்ராஜ், மதிமுகவைச் சேர்ந்த கணேசமூர்த்தி, இந்திய ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பாரிவேந்தர் ஆகிய 4 பேரும் திமுக உறுப்பினர்களாகவே கருதப்படுகின்றனர். இதன் மூலம் திமுகவுக்கு 23 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த வெற்றியின் மூலம் மக்களவையில் தேசிய அளவில் 3-வது பெரிய கட்சி என்ற அந்தஸ்து திமுகவுக்கு கிடைத்துள்ளது.

திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு எம்.பி. தேர்வு

இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக மக்களவை உறுப்பினர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன், கனிமொழி, தயாநிதி மாறன், ஆ.ராசா, திருச்சி சிவா உள்ளிட்ட எம்.பிக்கள் கலந்துகொண்டனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் மக்களவை குழு தலைவர், துணைத் தலைவர் பொறுப்புகளில் யார் யாரை நியமிப்பது என்பது பற்றி ஆலோசனை நடந்தது.

அதன்படி, மக்களவை திமுக குழு தலைவராக டி.ஆர். பாலு தேர்வு செய்யப்பட்டார். மக்களவை துணைத் தலைவராக கனிமொழியும், கொறடாவாக முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும், மக்களவை திமுக பொருளாளராக பழனி மாணிக்கம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மாநிலங்களவை குழு தலைவராக திருச்சி சிவாவும், மாநிலங்களவை கொறடாவாக டி.கே.எஸ். இளங்கோவனும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

NEXT STORY
திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர். பாலு, துணை தலைவராக கனிமொழி தேர்வு Description: மக்களவை திமுக பொருளாளராக பழனி மாணிக்கம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Loading...
Loading...
Loading...