சுபஸ்ரீ தந்தை ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

தமிழகம்
Updated Oct 09, 2019 | 18:23 IST | Times Now

சிறப்பு விசாரணைக் குழு அமைக்கவும், சட்டவிரோதமாக பேனர் வைப்பவர்களுக்கு அதிகப்படியான தண்டனையுடன் கடுமையான சட்டம் இயற்றவேண்டும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subashree's father seeks Rs.1 crore relief, சுபஸ்ரீ தந்தை ரூ.1 கோடி இழப்பீடு கோரி வழக்கு
சுபஸ்ரீ தந்தை ரூ.1 கோடி இழப்பீடு கோரி வழக்கு  |  Photo Credit: Twitter

சென்னை: சுபஸ்ரீயின் தந்தை ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். மேலும், சிறப்பு விசாரணைக் குழு அமைக்கவும், சட்டவிரோதமாக பேனர் வைப்பவர்களுக்கு அதிகப்படியான தண்டனையுடன் கடுமையான சட்டம் இயற்றவேண்டும் எனவும் தனது மனுவில் தெரிவித்துள்ளார். இவ்வழக்கு விடுமுறைக் கால சிறப்பு அமர்வு முன்பு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பள்ளிக்கரணையில் கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி பேனர் விழுந்து, லாரி மோதி இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்தார். இதனையடுத்து லாரி ஓட்டுநர் மனோஜை கைது செய்த காவல்துறை, சட்டவிரோதமாக பேனர் வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலை செப்டம்பர் 27-ஆம் தேதி கைது செய்தது.

கடந்த செப்டம்பர் 14-ஆம் தேதி வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக ஜெயகோபால் சேர்க்கப்பட்ட நிலையிலும் அவரை கைது செய்வதில் தாமதம் நீடித்தது. இதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர். ஜெயகோபாலை ஏன் கைது செய்யவில்லை என நீதிமன்றமும் கேள்வி எழுப்பியது. இதனையடுத்து, 14 நாட்கள் தேடலுக்குப் பிறகு கிருஷ்ணகிரியில் பதுங்கியிருந்த ஜெயகோபாலை தனிப்படை காவல்துறையினர் செப்டம்பர் 27-ஆம் தேதி கைது செய்தனர்.

பேனர் கலாச்சாரத்திற்கு அனைத்து தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், பிரதமர் மோடி - சீன அதிபர் சந்திப்பை முன்னிட்டு சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை 14 இடங்களில் அக்டோபர் 9 முதல் 13 தேதி வரையிலான 5 நாட்களுக்கு தமிழக அரசு சார்பில் பேனர் வைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்டது. இதற்கு நீதிபதிகள், பொதுமக்களுக்கு இடையூறின்றி பேனர் வைக்க தமிழக அரசுக்கு அனுமதி வழங்கினர்.

NEXT STORY