உள்ளாட்சித் தேர்தல், நீட் குறித்து சட்டப்பேரவையில் காரசார விவாதம்!

தமிழகம்
Updated Jul 17, 2019 | 13:00 IST | Times Now

உள்ளாட்சித் தேர்தல், நீட் குறித்து சட்டப்பேரவையில் இன்று காரசார விவாதம் நடைபெற்றது.

நீட் தேர்வு குறித்து தமிழக சட்டப்பேரவையில் காரசார விவாதம்
நீட் தேர்வு குறித்து தமிழக சட்டப்பேரவையில் காரசார விவாதம்  |  Photo Credit: Twitter

சென்னை: உள்ளாட்சி தேர்தலை நடத்தாததால் அடிப்படை பிரச்சினைகள் தீர்க்க முடியாமல் உள்ளது என தமிழக சட்டப்பேரவையில் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், உள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்த தமிழக அரசு முன் வருமா? என்றும் கேள்வி எழுப்பினார். நீட் தேர்வு தொடர்பாக மீண்டும் 2 மசோத்தாக்களை நிறைவேற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு தமிழக அரசு அனுப்பி வைக்குமா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று திமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், உள்ளாட்சி தேர்தலை நடத்தாததால் அடிப்படை பிரச்சினைகள் தீர்க்க முடியாமல் உள்ளது என்றும், மத்திய அரசின் நிதி கிடைப்பதிலும் சிக்கல் எழுந்துள்ளது என்றும் குறிப்பிட்டார். எனவே, இனியாவது உள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்த தமிழக அரசு முன் வருமா? என்றும் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, வார்டு வரையறைகள் 21 ஆண்டுகளுக்கு பிறகு மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது என்றும், தேர்தலை நடத்த அரசு தயாராக உள்ளது என்றும் தெரிவித்தார். 

இதேபோல், நீட் தேர்வு விவகாரத்தை மீண்டும் அவையில் எழுப்பினார். நீட் தேர்வு தொடர்பாக மீண்டும் 2 மசோதாக்களை நிறைவேற்றி, குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பீர்களா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். 

இதற்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், நீட் மசோதா தொடர்பான மத்திய அரசின் இமெயில் கடிதத்திலும், பிரமாண பத்திரத்திலும் ரிஜெக்ட் என்ற வார்த்தை இடம்பெறவில்லை என்றும், ரிட்டன் என்ற வார்த்தையே இடம்பெற்றிருந்தது என்றும் தெரிவித்தார். நீட் விவகாரத்தில் அரசு எதையும் மறைக்கவில்லை என்றும், திருப்பி அனுப்பியது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும், இதுவரை பதில் கிடைக்க வில்லை என்றும் தெரிவித்தார்.

இதுதொடர்பாக குறுக்கீட்டுப் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, நீட் தேர்வு வேண்டாம் என்பதில் அனைவரும் ஒருமித்த கருத்துடன் உள்ளதாகவும், நீட் தேர்வுக்காக சிறப்பு சட்டமன்ற கூட்டம் கூட்டப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...