தூய்மை இந்தியா திட்டத்தில் சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு

தமிழகம்
Updated Oct 03, 2019 | 13:13 IST | Times Now

ஊரகப் பகுதிகளில் சிறப்பான சுகாதாரம் கொண்ட மாநிலமாக தமிழகத்திற்கு ’தூய்மை இந்தியா விருது’ வழங்கி மத்திய அரசு கௌரவித்துள்ளது.

SP Velumani receives award from PM Narendra Modi, பிரதமர் மோடியிடம் விருது பெறும் அமைச்சர் வேலுமணி
பிரதமர் மோடியிடம் விருது பெறும் அமைச்சர் வேலுமணி  |  Photo Credit: Twitter

புது டெல்லி: 2019-ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் ஊரக துப்புரவு ஆய்வில், நாட்டின் மிகவும் தூய்மையான சிறந்த மாநிலமாக தமிழ்நாடு தேர்வாகியுள்ளது. கடந்தாண்டு 11-வது இடத்தில் இருந்த தமிழகம் இந்தாண்டு முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாம் இடத்தில் ஹரியானா மற்றும் மூன்றாம் இடத்தில் குஜராத் மாநிலம் இடம்பெற்றுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற தூய்மை இந்தியா விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் தமிழகத்திற்கான விருதை பிரதமர் நரேந்திர மோடி வழங்க, நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெற்றுக்கொண்டார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அமைச்சர் வேலுமணி கூறியதாவது: “நல்லொழுக்கம் மற்றும் குடிமை நல உணர்வு கொண்ட தமிழக மக்கள் சார்பில் ஊரக தூய்மைக்கான சிறந்த மாநிலம் என்ற விருதை பெறுவதில் பெருமிதம் கொள்கிறேன். கௌரவமிக்க இவ்விருதை தமிழக மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.” இவ்வாறு அமைச்சர் வேலுமணி கூறியுள்ளார்.

நாட்டின் மிகவும் தூய்மையான மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பட்டியலில் மிசோரம், தமன் தியு மற்றும் சிக்கிம் ஆகியவை முதல் மூன்று இடங்கள் முறையே கைப்பற்றின. தூய்மையான மாவட்டங்கள் பட்டியலில் தெலுங்கானாவின் பெத்தப்பள்ளி, ஹரியானாவின் ஃபரிதாபாத் மற்றும் ரேவாரி ஆகியவை முதல் மூன்று இடங்களை முறையே கைப்பற்றின.

நாடெங்கிலும் உள்ள 17,200 கிராமங்கள் மற்றும் 690 மாவட்டங்களில் ‘சுவச்சதா சர்வே’ எனப்படும் ஊரக துப்புரவு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், மொபைல் செயலி மற்றும் 12 லட்சம் தொலைபேசி அழைப்புகள் மூலம் கருத்துகள் பெறப்பட்டன. தங்கள் பகுதியில் செயல்படுத்தப்படும் நீர் மற்றும் திடக்கழிவு மேலாண்மை திருப்தியளிக்கும் வகையில் இருப்பதாக முறையே 83% மற்றும் 84% மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும், 72% மாவட்டங்களில் திறிந்தவெளி கழிப்புத் தடுப்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

NEXT STORY