9 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தமிழகம்
Updated Oct 10, 2019 | 15:02 IST | Times Now

வழக்கமாக, செப்டம்பர் 1-ஆம் தேதி தென்மேற்கு பருவக்காற்று விலக தொடங்கும் நிலையில் இம்முறை 39 நாட்கள் தாமதமாகத் தொடங்கியுள்ளது.

2,100 dead in Southwest monsoon, தென்மேற்கு பருவமழையால் 2,100 பேர் உயிரிழப்பு
தென்மேற்கு பருவமழையால் 2,100 பேர் உயிரிழப்பு  |  Photo Credit: IANS

சென்னை: வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோயம்புத்தூர், சேலம், நீலகிரி, தருமபுரி, ஈரோடு, சிவகங்கை, இராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்பநிலை அதிகபட்சம் 35 டிகிரி செல்சியசும் குறைந்தபட்சம் 27 டிகிரி செல்சிசும் இருக்கும். கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக கோயம்புத்தூர் மாவட்டம் சின்னக்காறில் 7 செ.மீ மழை பெய்துள்ளது.

மேலும் தென்மேற்கு பருவக்காற்று விலக தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வழக்கமாக, செப்டம்பர் 1-ஆம் தேதி தென்மேற்கு பருவக்காற்று விலக தொடங்கும். இம்முறை, 39 நாட்கள் தாமதமாக தென்மேற்கு பருவக்காற்று விலகத் தொடங்கியுள்ளது. 59 ஆண்டுகளுக்கு பிறகு இது போல நிகழ்வதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இந்நிலையில், வரும் 20-ஆம் தேதி வாக்கில் வடகிழக்கு பருவக்காற்று வீசத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென்மேற்கு பருவமழை காரணமாக நாட்டில் 2,100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்ட்ரா மாநிலத்தில் 399 பேரும், மேற்கு வங்கத்தில் 227 பேரும் உயிரிழந்தனர்.

NEXT STORY