தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்டுவதற்கு தடைவிதிக்கக் கோரி தமிழ்நாடு தொடந்த வழக்கைத் தள்ளுபடி செய்து, அணை கட்டத் தடையேதுமில்லை என்று உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
தென்பெண்ணை ஆறு கர்நாடகா மாநிலம் சென்னகேசவா மலையில் உற்பத்தியாகி ஓசூர் வழியாக ஓடி கடலூர் அருகே கடலில் கலக்கிறது. இந்நிலையில் தென்பெண்ணை ஆற்றின் கிளை நதியான மார்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடகா 50 மீட்டர் உயரத்தில் புதிய அணை கட்டி வருகிறது.
இதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு, தென்பெண்ணை ஆற்றில் தங்களின் ஒப்புதல் இல்லாமல் அணை கட்டக்கூடாது எனவும், தமிழகத்திலும் தென்பெண்ணை ஆறு ஓடுவதால் தமிழகத்தைக் கேக்காமல் அணை கட்டுவது கூடாது எனவும் வழக்கு தொடுத்தது. இதற்கு பதில் மனு தாக்கல் செய்த கர்நாடகா இந்த அணை குடிநீர் தேவைக்காக கட்டப்படுகிறது என்றும் அதற்கு தங்களுக்கு முழு உரிமை உள்ளது, தமிழகத்திடம் அனுமதி பெற வேண்டியதில்லை எனவும் கூறியது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் தென்பெண்ணை ஆற்றில் புதிய அணை கட்டுவதற்கு தடை விதிக்கக் கொரிய தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் தென்பெண்ணை ஆற்றில் அணை கட்ட கர்நாடகாவுக்கு எந்தத் தடையும் இல்லை என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளது.