ஜீவஜோதி கணவர் கொலை வழக்கு: சிறைவாசம் செல்லும் சரவணபவன் ஹோட்டல் அதிபர்

தமிழகம்
Updated Jul 04, 2019 | 20:48 IST | Times Now

ஜோதிடர் ஒருவரின் ஆலோசனைப்படி 3-வது திருமணம் செய்ய ஆசைப்பட்டு கூலிப்படையை வைத்து கொலை செய்தது தான் சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபால் சிறைவாசம் செல்ல காரணம் என்றும் கூறப்படுகிறது.

Saravana Bhavan hotel founder Rajagopal
Saravana Bhavan hotel founder Rajagopal  |  Photo Credit: Twitter

சென்னை: ஜீவஜோதி கணவர் சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபாலின் தண்டனை காலம் ஜூலை 7-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபால் தனது ஹோட்டலில் பணிபுரிந்த ஊழியரின் மகளான ஜீவஜோதியை 3-வது மனைவியாக அடைய நினைத்தார். இதற்காக ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரை கூலிப்படை மூலம் கடத்தி கொடைக்கானல் மலை பகுதியில் வைத்து கொலை செய்த வழக்கில் ராஜகோபால் கைது செய்யப்பட்டார்.

தமிழகத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்ட இந்த வழக்கின்  விசாரணை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் கடந்த 2004-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கில் முக்கிய குற்றவாளியான ராஜகோபாலுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்தது பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம். மேலும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட அவரது கூட்டாளிகள் 8 பேருக்கும் 9 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.  

இதனை எதிர்த்து ராஜகோபால் உள்ளிட்ட 9 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அந்த மேல்முறையீட்டு வழக்கில், சரவணபவன் ராஜகோபால் மற்றும் குற்றம்சாட்டப்பட்ட பட்டுராஜன், ஜனார்த்தனன், டேனியல், தமிழ், கார்மேகம் ஆகிய 6 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதையும் எதிர்த்து ராஜகோபால் உள்ளிட்ட 6 பேரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். சுமார் 10 ஆண்டுகள் நடந்து வந்த இந்த வழக்கில் கடந்த மார்ச் மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதன்படி, உயர்நீதிமன்றம் அளித்த ஆயுள் தண்டனையை 6 பேருக்கும் உறுதி செய்தது. இதனைத் தொடர்ந்து ஜூலை 7-ஆம் தேதிக்குள் ராஜகோபால் உள்ளிட்ட 6 பேரும் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்து சிறைக்கு செல்ல வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கெடு விதித்திருந்தது.  அதன்படி, 71 வயதாகும் ராஜகோபாலின் ஆயுள் தண்டனை வருகிற 7-ஆம் தேதியில் இருந்து தொடங்குகிறது. 

உலகம் முழுவதும் பல நாடுகளில் சரவணபவன் ஹோட்டலின் கிளைகள் உள்ளன. கடின உழைப்பால் முன்னேறி ஹோட்டல் தொழிலில் கொடி கட்டி பறந்த ராஜகோபாலன் ஜோதிடர் ஒருவரின் ஆலோசனைப்படி 3-வது திருமணம் செய்ய ஆசைப்பட்டு கூலிப்படையை வைத்து கொலை செய்தது தான் அவர் சிறைவாசம் செல்ல காரணம் என்றும் கூறப்படுகிறது. 

NEXT STORY
ஜீவஜோதி கணவர் கொலை வழக்கு: சிறைவாசம் செல்லும் சரவணபவன் ஹோட்டல் அதிபர் Description: ஜோதிடர் ஒருவரின் ஆலோசனைப்படி 3-வது திருமணம் செய்ய ஆசைப்பட்டு கூலிப்படையை வைத்து கொலை செய்தது தான் சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபால் சிறைவாசம் செல்ல காரணம் என்றும் கூறப்படுகிறது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles