ரவிச்சந்திரன் பரோல் மனு மீது தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

தமிழகம்
Updated Oct 15, 2019 | 16:42 IST | Times Now

ரவிச்சந்திரன் தாயார் தாக்கல் செய்த பரோல் மனு மீது மூன்று வாரத்தில் பதிலளிக்க தமிழக உள்துறையின் சிறைத்துறை அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டது.

Madras HC Madurai Bench orders on Ravichandran Parole Plea, ரவிச்சந்திரன் பரோல் மனு மீது உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
ரவிச்சந்திரன் பரோல் மனு மீது உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு  |  Photo Credit: Twitter

மதுரை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ரவிச்சந்திரனுக்கு ஒரு மாத கால பரோல் வழங்குமாறு அவரது தாயார் ராஜேஷ்வரி தாக்கல் செய்திருந்த மனு மீது 3 வாரத்தில் பரிசீலித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, ரவிச்சந்திரனுக்கு நீண்ட நாள் பரோல் வழங்கக் கோரி 2018 ஆம் ஆண்டு டிசம்பரில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, நீண்ட நாள் பரோல் வழங்க சாத்தியமில்லை என்று கூறிய தமிழக அரசு, ஒரு மாதம் பரோல் வழங்கலாம் என தெரிவித்தது. இதனை தொடர்ந்து, ஒரு மாதம் பரோல் வேண்டி ரவிச்சந்திரன் தரப்பில் புதிதாக மனு தாக்கல் செய்யப்பட்டது. 

ரவிச்சந்திரன் தாயார் ராஜேஷ்வரி தாக்கல் செய்த பரோல் மனுவில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டதை தொடர்ந்து கடந்த 27 ஆண்டுகளாக தனது மகன் சிறையில் இருப்பதாகவும், இதுவரை நான்கு முறை மட்டுமே பரோலில் வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. 7 ஆண்டுகள், 10 ஆண்டுகள், 14 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவர்கள் எல்லாம் முன்கூட்டியே விடுதலை செய்யப்படும் நிலையில், அரசியல் காரணங்களுக்காக ரவிச்சந்திரன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை செய்யப்படவில்லை என ராஜேஷ்வரி தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

ரவிச்சந்திரன் உட்பட ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசே முடிவு செய்யலாம் என 2018-ல் உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையிலும் இந்த விவகாரத்தில் ஆளுநர் தனது முடிவை இன்னும் அறிவிக்கவில்லை. இந்நிலையில், ரவிச்சந்திரனின் பரோல் மனு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்த போது, மூன்று வாரத்தில் பரிசீலித்து பதிலளிக்க தமிழக உள்துறையின் சிறைத்துறை அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டது.

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...