வங்கக் கடலில் ஏப்.29-ல் புயல் உருவாக வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தமிழகம்
Updated Apr 23, 2019 | 14:42 IST | Times Now

அடுத்த 24 மணி நேரத்தில் கோவை, ஈரோடு, திண்டுக்கல், விருதுநகர், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Rain to lash some districts inculding kovai, erode,
அடுத்த 24 மணி நேரத்தில் கோவை, விருதுநகரில் மழைக்கு வாய்ப்பு  |  Photo Credit: ANI

சென்னை: வங்கக்கடலில் வரும் 29 -ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு இருப்பதால் கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியப் பெருங்கடல் அதனை ஒட்டியுள்ள தென் மேற்கு வங்கக் கடலில் ஏப்ரல் 25-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது மேலும் வலுவடைந்து ஏப்ரல் 27-ம் தேதி காற்றழுத்து தாழ்வு மண்டலமாக மாறுகிறது.

அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 29-ம் தேதி தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து புயலாக மாறும். இதன் காரணமாக கடலோர மாவட்டங்களில் 29-ம் தேதியில் இருந்து இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அப்போது தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். 

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் கடந்த சில தினங்களாக மிதமானது முதல் கனமழை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சேலம் மாவட்டம் ஆத்தூரில் 10 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் ஈரோடு, சேலம், கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸும் குறைந்த பட்சம் 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்''. இவ்வாறு புவியரசன் தெரிவித்தார்.
 

NEXT STORY
வங்கக் கடலில் ஏப்.29-ல் புயல் உருவாக வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் Description: அடுத்த 24 மணி நேரத்தில் கோவை, ஈரோடு, திண்டுக்கல், விருதுநகர், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
Loading...
Loading...
Loading...