தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகம்
Updated Sep 19, 2019 | 13:36 IST | Times Now

அடுத்த 24 மணிநேரத்தை பொறுத்தவரை வட தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.

S Balachandran, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன்
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன்  |  Photo Credit: YouTube

சென்னை: தமிழகத்தில் அடுத்த 2-3 தினங்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த 24 மணிநேரத்தில் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்துள்ளதாகத் அவர் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழகத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் வட தமிழகத்தின் அநேக இடங்களிலும் தென் தமிழகத்தின் ஒருசில இடங்களிலும் மிதமான மழை பெய்துள்ளது.

அதிகபட்சமாக திருவள்ளுரில் 22 செ.மீ, பூண்டியில் 21 செ.மீ, அரக்கோணத்தில் 17 செ.மீ, தாமரைப்பாக்கத்தில் 15 செ.மீ மழையும், நுங்கம்பாக்கத்தில் 10 செ.மீ, மீனம்பாக்கத்தில் 9 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

அடுத்த 24 மணிநேரத்தை பொறுத்தவரை வட தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருப்பூர், தேனி, திண்டுக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கான வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை இடைவெளி விட்டு சிலமுறை மிதமான மழை பெய்யக்கூடும். மீனவர்கள் அடுத்து வரும் 2 தினங்களுக்கு தென்கிழக்கு வங்கக்கடலுக்கு செல்ல வேண்டம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தற்போதைய நிலவரப்படி மழையானது அடுத்து வரும் 2-3 தினங்களுக்கு தொடரும். டெல்டா மாவட்டங்களை காட்டிலும் வடக்கு மற்றும் உள் மாவட்டங்களில் மழைக்கு அதிக வாய்ப்புள்ளது எனத் தெரிவித்தார்.

NEXT STORY