இளைஞர்கள் மிதிவண்டிப் பயணத்துக்கு மாற வேண்டும் - ராமதாஸ் வேண்டுகோள்

தமிழகம்
Updated Oct 15, 2019 | 19:05 IST | Times Now

தமிழகத்தில் மிதிவண்டிகள் இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலையை ஏற்படுத்துவதுடன், அனைவரும் மிதிவண்டியைப் பயன்படுத்துவதையும் உறுதி செய்ய வேண்டும்.

PMK founder Dr.Ramadoss
பாமக நிறுவனர் ராமதாஸ்  |  Photo Credit: Twitter

சென்னை: மிதிவண்டிகளைப் பயன்படுத்துவதன் மூலம் உடல்நலன், பொருளாதாரப் பயன்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, விபத்துத் தவிர்ப்பு உள்ளிட்ட ஏராளமான பயன்கள் கிடைக்கும் நிலையில் அவற்றைப் பயன்படுத்த இளைஞர்கள் முன்வர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுதொடர்பாக ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில், "உலகில் அதிக இளைஞர்களைக் கொண்ட நாடு இந்தியாதான் என்பது நமக்கு பெருமையளிக்கும் விஷயம் என்றாலும், இன்றைய இளைஞர்களிடையே மாறி வரும் வாழ்க்கை முறையும், பயண முறையும் அவர்களின் உடல் நலனையும், பொருளாதாரத்தையும் கடுமையாகப் பாதிக்கின்றன. இந்த ஆபத்தான போக்கு குறித்து இளைஞர்களிடம் விழிப்புணர்வு இல்லாதது மிகவும் வருத்தமளிக்கிறது.

பொதுவாக இந்தியா போன்ற வளரும் நாடுகளில் மிதிவண்டிப் பயன்பாடு அதிக அளவில் இருக்கும். ஆனால், புதிய பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக வகை வகையான இரு சக்கர வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட்டதாலும், அவை எளிய தவணை முறையில் விற்பனை செய்யப்பட்டதாலும் இரு சக்கர வாகனங்கள் இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலை ஏற்பட்டது. இதனால் மிதிவண்டிப் பழக்கம் படிப்படியாகக் குறையத் தொடங்கியது.

இன்றைய நிலையில் இந்திய மக்களில் 9 விழுக்காட்டினர் மட்டுமே மிதிவண்டிகளைப் பயன்படுத்துகின்றனர் என்பது மிகவும் வருத்தமளிக்கும் உண்மை ஆகும். ஆனால், வளர்ந்த நாடுகளான பின்லாந்தில் 60%, ஜப்பான் 57%, பெல்ஜியம், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் தலா 48%, சீனாவில் 37.2% பேர் மிதிவண்டிகளைப் பயன்படுத்துகின்றனர்.

டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் 52% மக்கள் மிதிவண்டிகளைப் பயன்படுத்துகின்றனர். இதனால் அது மிதிவண்டி ஓட்டிகளின் சொர்க்கம் என்று அழைக்கப்படுகிறது. உலக அளவில் மிதிவண்டிகளை அதிகம் பயன்படுத்தும் 20 நகரங்களில் இந்திய நகரங்கள் ஒன்று கூட இல்லை என்பது வேதனையான உண்மை. அதேநேரத்தில் இந்தியாவில் மூன்றில் ஒரு குடும்பத்தில் இரு சக்கர வாகனம் சொந்தமாக உள்ளது. உலக அளவில் இன்றைய நிலையில் 200 கோடி இரு சக்கர வாகனங்கள் உள்ளன. 2050 ஆம் ஆண்டில் இது 500 கோடியாக அதிகரிக்கக்கூடும். அத்தகைய நிலை ஏற்படும் போது நீரிழிவு நோய் போன்ற தொற்றாநோய்களும் அதற்கு இணையாக அதிகரிக்கக் கூடும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

மிதிவண்டிப் பயன்பாட்டைப் பொறுத்தவரை சென்னை மாநகரம் பெருமைப்படவும், வெட்கப்படவும் காரணங்கள் உள்ளன. இந்தியாவிலேயே சென்னையில் தான் அதிக அளவில் மிதிவண்டிப் பயன்பாடு உள்ளது. சென்னையில் 37% குடும்பங்கள் மிதிவண்டியைப் பயன்படுத்துகின்றனர். அதேநேரத்தில் கடந்த 2001 ஆம் ஆண்டில் 46% குடும்பங்கள் மிதிவண்டியைப் பயன்படுத்தி வந்த நிலையில், 2011 ஆம் ஆண்டில் இது 37% ஆகக் குறைந்து விட்டது. இதேநிலை தொடர்ந்தால் அடுத்த சில பத்தாண்டுகளில் சென்னையில் மிதிவண்டி ஓட்டும் வழக்கமே அழிந்து விடக்கூடும் என்பதை அனைவரும் உணர வேண்டும்.

உண்மையில் மிதிவண்டி ஓட்டுவது சிறந்த உடற்பயிற்சி ஆகும். மிதிவண்டி ஓட்டுவதை வழக்கமாக்கிக் கொள்வதன் மூலம் தொற்றாநோய்களின் தாக்கத்திலிருந்து காப்பாற்றிக் கொள்ள முடியும். அதுமட்டுமின்றி எரிபொருள் செலவை மிச்சப்படுத்துதல், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் உள்ளிட்ட ஏராளமான பயன்கள் கிடைக்கும். இந்திய அளவில் செய்யப்பட்டுள்ள ஆய்வுகளின்படி இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களைப் பயன்படுத்துவோரில் 50 விழுக்காட்டினர் குறைந்த தூர பயணத்திற்கு மிதிவண்டிகளைப் பயன்படுத்தத் தொடங்கினால் ஆண்டுக்கு ரூ.2,700 கோடி எரிபொருள் செலவை மிச்சப்படுத்த முடியும்.

அதுமட்டுமின்றி, இப்போது கார் - இரு சக்கர வாகனங்களைப் பயன்படுத்துவோர் 8 கி.மீ.க்கும் குறைவான தூரத்துக்குப் பயணிக்க, ஆண்டுக்கு 240 நாட்கள் மிதிவண்டிகளைப் பயன்படுத்துவதால் 10 ஆண்டுகளில் கிடைக்கும் மருத்துவப் பயன்களின் மதிப்பு மட்டும் ரூ.4.76 லட்சம் கோடி (ஆண்டுக்கு ரூ.47,670 கோடி), காற்று மாசு தடுக்கப்படுவதால் கிடைக்கும் பயன்கள் ரூ.24,100 கோடி, ஏழை மக்கள் 3.5 கி.மீ தொலைவு வரை நடப்பதற்குப் பதிலாக மிதிவண்டியில் பயணிப்பதால் மிச்சமாகும் உழைப்பு நேரத்தின் மதிப்பு ரூ.11,200 கோடி என அந்த ஆய்வு தெரிவிக்கிறது. இந்த புள்ளிவிவரங்களின்படி பார்த்தால் மிதிவண்டி புரட்சி செய்வதன் மூலம் ஆண்டுக்கு ரூ.85,670 கோடியை மிச்சப்படுத்த முடியும்.

மிதிவண்டிகளைப் பயன்படுத்துவதன் மூலம் உடல்நலன், பொருளாதாரப் பயன்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, விபத்துத் தவிர்ப்பு உள்ளிட்ட ஏராளமான பயன்கள் கிடைக்கும் நிலையில் அவற்றைப் பயன்படுத்த இளைஞர்கள் முன்வர வேண்டும். அதிக தொலைவுக்குச் செல்லும் போது பேருந்து, ரயில் போன்ற பொதுப்போக்குவரத்து நிலையங்கள் வரை மிதிவண்டிகளையும், பின்னர் பொதுப்போக்குவரத்தையும் பயன்படுத்தலாம். புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த இது உதவும்.

பாமக தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே இதை வலியுறுத்தி வரும் நான், ஒரு விழிப்புணர்வுப் பயணத்திற்காக வாணியம்பாடி முதல் வாலஜா வரை 120 கி.மீ. தொலைவுக்கு மிதிவண்டியில் பயணம் செய்துள்ளேன். 2006-11 காலத்தில் பாமக சட்டப்பேரவை உறுப்பினர்கள் 18 பேரும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் விடுதியிலிருந்து பேரவைக்கு மிதிவண்டியில்தான் பயணிக்க வேண்டும் என்று ஆணையிட்டு, அதை அவர்கள் கடைபிடிப்பதை உறுதி செய்தேன்.

எனவே, தமிழகத்தில் மிதிவண்டிகள் இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலையை ஏற்படுத்துவதுடன், அனைவரும் மிதிவண்டியைப் பயன்படுத்துவதையும் உறுதி செய்ய வேண்டும். அதேநேரத்தில் சென்னை போன்ற நகரங்களில் அனைத்துத் தரப்பினரும் மிகவும் பாதுகாப்பான முறையில் மிதிவண்டிகளை ஓட்ட வசதியாக சாலைகளில் தனிப்பாதையை ஏற்படுத்துதல், வாடகை மிதிவண்டி திட்டத்தை மேலும் பல நகரங்களுக்கு விரிவுபடுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும்," என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...