ப. சிதம்பரம் பூமிக்கு பாரமாக உள்ளார்: முதல்வர் பழனிசாமி கடும் சாடல்

தமிழகம்
Updated Aug 13, 2019 | 12:55 IST | Times Now

"அவர் எத்தனை ஆண்டுகாலம் மத்திய அமைச்சராக இருந்தார்? (அதனால்) இந்த நாட்டுக்கு என்ன பயன்? இந்த பூமிக்குத் தான் அவர் பாரம்,” என்று ப. சிதம்பரத்தை முதல்வர் பழனிசாமி கடுமையாக சாடியுள்ளார்.

P. Chidambaram, Edappadi K. Palaniswami
ப. சிதம்பரம், எடப்பாடி பழனிசாமி  |  Photo Credit: BCCL

மேட்டூர்/சேலம்: ப. சிதம்பரத்தால் தமிழகத்திற்கு எந்த பயனும் கிடைக்கவில்லை என்றும், அவரால் பூமிக்குத் தான் பாரம் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மேட்டுர் அணையைத் திறக்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சேலத்திற்கு சென்றார். அப்போது, தமிழகத்தை யூனியன் பிரதேசம் ஆக்கினால் கூட அதிமுக கைகட்டிய படி நிற்கும் என்று முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் குற்றம்சாட்டியது குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

”அவர் எத்தனை ஆண்டுகாலம் மத்திய அமைச்சராக இருந்தார்? (அதனால்) இந்த நாட்டுக்கு என்ன பயன்? இந்த பூமிக்குத் தான் அவர் பாரம்,” என்று முதல்வர் பழனிசாமி கூறியவுடன் அருகே இருந்த அமைச்சர்கள் மற்றும் கட்சியினர் சிரிப்பொலி எழுப்பினர்.

“(தமிழகத்திற்கு) தேவையான நிதி கொடுத்திருக்கிறாரா, புதிய தொழிற்சாலைகள் அமைத்தாரா, புதிய திட்டங்கள் கொண்டு வந்தாரா, காவிரி நதிநீர் பிரச்சனையைத் தீர்த்தாரா, முல்லைப்பெரியாறு அணைப் பிரச்சனையைத் தீர்த்தாரா, பாலாறு பிரச்சனையைத் தீர்த்தாரா, எந்த பிரச்சனையைத் தீர்த்தார்? அவருடைய சுயநலம் தான் அவருக்கு முக்கியம்; நாட்டு நலன் கிடையாது. எனவே அவருடைய பேச்சைப் பொருட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை,” என்று முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப. சிதம்பரத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.

மேலும் பேசிய முதல்வர், “மக்கள் அவரை ஏற்கனவே நிராகரித்து விட்டனர். அவருக்கு அதிகாரம் தான் தேவை. நான் பல முறை சேலம் வந்திருக்கிறேன், மக்களை சந்தித்திருக்கிறேன், பல திட்டங்களை அறிவித்திருக்கிறேன். அவர் எத்தனை முறை தமிழக மக்களை சந்தித்திருக்கிறார், எத்தனை முறை தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார்?” என்று கேட்டார்.

முன்னதாக, ஜம்மு காஷ்மீரைப் போல தமிழகத்தை யூனியன் பிரதேசம் ஆக்கினால் அதிமுக ”அதிமுக கைகட்டிய படி நிற்கும்’’ என்று திங்கட்கிழமை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் ப. சிதம்பரம் பேசியிருந்தார். இதற்கு பதிலடி தரும் விதமாக இன்று முதல்வர் இவ்வாறு பேசியுள்ளார். 

NEXT STORY
ப. சிதம்பரம் பூமிக்கு பாரமாக உள்ளார்: முதல்வர் பழனிசாமி கடும் சாடல் Description: "அவர் எத்தனை ஆண்டுகாலம் மத்திய அமைச்சராக இருந்தார்? (அதனால்) இந்த நாட்டுக்கு என்ன பயன்? இந்த பூமிக்குத் தான் அவர் பாரம்,” என்று ப. சிதம்பரத்தை முதல்வர் பழனிசாமி கடுமையாக சாடியுள்ளார்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...