வடகிழக்கு பருவமழை 17-ஆம் தேதி தொடக்கம் - வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகம்
Updated Oct 15, 2019 | 15:46 IST | Times Now

வரும் 17-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தமிழகம், புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு கடலோர ஆந்திரா, ராயல்சீமா, தெற்கு உள் கர்நாடகா, கேரளா ஆகிய பகுதிகளில் தொடங்க வாய்ப்புள்ளதாக புவியரசன் தகவல்.

Puviyarasan, வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன்
வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன்  |  Photo Credit: YouTube

சென்னை: தென்மேற்கு பருவமழை இந்தியப் பகுதிகளில் இருந்து படிப்படியாக விலகத் தொடங்கிவிட்டதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த புவியரசன், அடுத்த 48 மணிநேரத்தில் தென்மேற்கு பருவமழை முற்றிலுமாக விலகக் கூடும் என்றார். அதே சமயம், வரும் 17-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தமிழகம், புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு கடலோர ஆந்திரா, ராயல்சீமா, தெற்கு உள் கர்நாடகா, கேரளா ஆகிய பகுதிகளில் தொடங்க வாய்ப்புள்ளதாக புவியரசன் கூறினார். 

இதன் காரணமாக அடுத்து வரும் 48 மணிநேரத்தில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைக்கும், தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் வடக்கு உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம் மற்றும் தருமபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்தாா்

மேலும், சென்னை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. வெப்பநிலை அதிகபட்சம் 35 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சம் 27 டிகிரி செல்சியசும் இருக்கும். வரும் 17, 18 தேதிகளில் மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறைக்காற்று வீச வாய்ப்பு இருப்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பான அளவு பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்ச பழை அளவாக தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் 8 செ.மீ மழையும், இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி மற்றும் தூத்துக்குடியில் 7 செ.மீ மழையும் பெய்துள்ளது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் 6 செ.மீ மழையும், கேத்தியில் 5 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளாா்.

NEXT STORY