சென்னை: ஈரப்பதத்துடன் கூடிய கிழக்கு திசை காற்று, தென்னிந்திய பகுதிகளில் பரவி பரவலாக மழை பெய்து வருவதாக வானிலை தென்மண்டல துணைத்தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகம், கேரளா, கர்நாடகம், தெற்கு ஆந்திரா ஆகிய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக கூறினார்.
வடகிழக்கு பருவமழை நாளை தொடங்கும் என கணிக்கப்பட்ட நிலையில் தற்போது முன்கூட்டியே தொடங்கியுள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் தமிழகக் கடற்கரை ஒட்டி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
அடுத்த 24 மணிநேரத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். வரும் 17, 18 தேதிகளில் மீனவர்கள் குமரிக்கடல் மற்றும் மாலத்தீவு பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, இடைவெளி விட்டு மிதமான மழை தொடரும். கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்ச மழை அளவாக திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் 11 செ.மீ மழையும், இராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் 10 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.