கோர்ட்டில் தொடர்ந்து ஆஜராகததால் பேராசிரியர் நிர்மலாதேவியின் ஜாமீனை ரத்து செய்து அவருக்கு பிடிவாரண்டை பிறப்பித்து ஸ்ரீவில்லிபுதூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முயன்ற சம்பவத்தில் பல்வேறு பிரிவுகளில் பேராசிரியை நிர்மலாதேவி, அவருடன் பணியாற்றிய முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு ஜாமீனும் வழங்கப்பட்டது.
ஜாமீன் வழங்கப்பட்டாலும் இந்த வழக்கின் விசாரணை நடந்துகொண்டு இருக்கிறது. ஜாமீனில் வெளியேவந்த நிர்மலாதேவி செல்லும் இடங்களில் எல்லாம் வித்தியாசமாக நடந்துகொண்டது அவ்வபோது பரபரப்பானது. திடீரென்று கத்தி கூச்சல் போட்டு மயக்கம் அடைவது, திடீரென்று சாமி வந்துவிட்டது என்று கூறி குறி சொல்வது என நிர்மலாதேவி காணப்பட்டார்.
இந்நிலையில் ஏற்கனவே 2 முறை கோர்டில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டபோது நிர்மலாதேவியைத் தவிர மற்ற இருவரும் ஆஜராகியுள்ளனர். இன்றும் கோர்டில் மூவரும் ஆஜராக வேண்டி இருந்தது, ஆனால் நிர்மலாதேவி ஆஜராகவில்லை. அவரது வழக்கறிஞர் நீதிபதியிடம், நிர்மலாதேவிக்கு மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதனால் ஆஜராக இயலவில்லை என்று தெரிவித்தார்.
ஆனால் இதனைக் காரணமாக நீதிபதி ஏற்றுக்கொள்ள மறுத்து அவருக்கு அளித்திருந்த ஜாமீனை ரத்து செய்து பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டனர். மேலும் வழக்கை வரும் 28ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.