விரைவில் ஆம்னி பஸ் கட்டணம் உயர்கிறது? புதிய வரி விதிப்பு மசோதா தாக்கல்

தமிழகம்
Updated Jul 18, 2019 | 15:56 IST | Times Now

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள புதிய வரி விதிப்பு மசோதாவால் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் மேலும் உயர வாய்ப்புள்ளது.

omni bus, ஆம்னி பேருந்து
ஆம்னி பேருந்து  |  Photo Credit: Twitter

சென்னை: படுக்கை வசதியுடன் கூடிய ஆம்னி பேருந்துகளுக்கு புதிதாக வரி விதிக்கும் மசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் பல்வேறு துறை ரீதியாக மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெறுகிறது. துறை சார்ந்த புதிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்தவகையில், செங்கல்பட்டு, தென்காசி ஆகிய 2 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்தார்.

மேலும்,படுக்கை வசதி கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு புதிதாக வரி விதிக்கும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதனை போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கல் செய்தார். இதன்படி ஆம்னி பேருந்துகளுக்கு இனி ஒரு இருக்கைக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரமும், படுக்கை வசதியுடன் கூடிய இருக்கைக்கு ரூ.2,500 என வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுவரை வரிவிதிப்பு இல்லாத நிலையில் தற்போது படுக்கை வசதியுடைய ஆம்னி பேருந்துகளுக்கு புதியதாக வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர வாய்ப்புள்ளது. ஏற்கெனவே, வார இறுதி நாட்கள், பொங்கல், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்த புதிய மசோதாவால் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் மேலும் உயர வாய்ப்புள்ளது.

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...