வங்கக்கடலில் நாளை புதிய புயல்; துறைமுகங்களில் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்

தமிழகம்
Updated Nov 05, 2019 | 15:25 IST | Times Now

வங்கக்கடலில் நாளை புதிய புயல் உருவாக வாய்ப்புள்ளதால் தமிழகத்தின் மூன்று துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Balachandran IMD, வானிலை தென்மண்டல துணைத்தலைவர் பாலச்சந்திரன்
வானிலை தென்மண்டல துணைத்தலைவர் பாலச்சந்திரன்  |  Photo Credit: YouTube

சென்னை: வங்கக்கடலில் புதிய புயல் உருவாகி வருவதாக வானிலை தென்மண்டல துணைத்தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். இதையடுத்து காரைக்கால், நாகை, மற்றும் கடலூர் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

நேற்று அந்தமான் கடல் பகுதியில் உருவான குறைந்த கற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். நாளை நவம்பர் 6-ஆம் தேதி புயலாக வலுப்பெறக்கூடும். 

தற்போதைய நிலவரப்படி, இது வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஒடிசா, மற்றும் மேற்குவங்கக் கடற்கரை பகுதியை நோக்கி நகரக்கூடும். கடந்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக மண்டபத்தில் 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மீனவர்கள் நவம்பர் 5-ஆம் தேதி (இன்று) அந்தமான் கடல் பகுதிகள், மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நவம்பர் 6, 7 ஆகிய தேதிகளில் மத்திய வங்கக்கடல் பகுதி மற்றும் வடக்கு ஆந்திரா கடற்பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

அக்டோபர் 1 முதல் இன்று வரையிலான காலக்கட்டத்தில் 23 செ.மீ. மழை பெய்துள்ளது. இந்த காலக்கட்டத்தின் இயல்பளவான 22 செ.மீ உடன் ஒப்பிடும் போது, 8 சதவிகிதம் அதிக மழை பெய்துள்ளது.

NEXT STORY