சூப்பர்ஸ்டார் ஆவீர்கள் என்று நீங்களும் நினைத்திருக்கமாட்டீர்கள் - ரஜினிக்கு நமது அம்மா நாளிதழ் பதில்

தமிழகம்
Updated Nov 19, 2019 | 13:34 IST | Times Now

’’கண்டக்டராக வாழ்க்கையை தொடங்கிய நீங்களும் கன்னித்தமிழ் பூமியின் சூப்பர்ஸ்டாராவோன் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டீர்கள்.’’ என்று ரஜினிக்கு நமது அம்மா நாளிதழ் தெரிவித்துள்ளது.

Rajinikanth
Rajinikanth  |  Photo Credit: Twitter

ரஜினிகாந்த் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து பேசியதற்கு நமது அம்மா நாளிதழ் பதிலடி கொடுத்துள்ளது.  

கமல்ஹாசன் சினிமாவில் நுழைந்து 60 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி நடைபெற்ற உங்கள் நான் விழாவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைப் பற்றி பேசியிருந்தார். அதில் தமிழக அரசியலில் எப்போதும் அதிசயம்தான் நிகழ்ந்திருக்கிறது. சில வருடங்களுக்கு முன்புவரை எடப்பாடி பழனிசாமியை முதல்வராக யாரும் நினைத்திருக்கமாட்டார்கள். அவர் முதல்வரானபோது 4 மாதம்கூட தாக்குப் பிடிக்கமாட்டார் என்று கூறினார்கள். ஆனால் இன்று வரை அவரது ஆட்சி சிறப்பாக நீடிக்கிறது. இதுபோன்று நாளையும் அதிசயம் நிகழும் என்று கூறியிருந்தார். 

இதற்கு அதிமுகவின் பத்திரிகையான நமது அம்மா நாளிதழ் ஒரு நீண்ட கட்டுரையை வெளியிட்டுள்ளது. அதில், ‘’கேள்விகளையும் கேலிகளையும் ஆச்சரியங்களாக்கி எடப்பாடியார் நடத்துகிற நல்லாட்சி 2021-லும் தொடரும் என்பதைதான் நாளைக்கும் நடக்கப்போகிற அதிசயம் என்பதாக சூப்பர்ஸ்டார் சொல்லி இருக்கிறார் போலும். மொத்தத்தில் முதலமைச்சர் பதவி என்பது தான் எடுக்கும் சினிமாக்களில் முதல் சீசனில் ஆசைப்பட்டு மூன்றாவது காட்சியிலேயே கைக்கு எட்டி விடுகிற கற்பனை நாற்காலிகள் அல்ல என்பதனை கமல்ஹாசனுக்கு ரஜினி சுட்டிக் காட்டியிருக்கும் மறைமுக அறிவுறையாகவே இக்கருத்து தோன்றுகிறது.

கூடவே, ‘’தான் முதலமைச்சர் ஆவேன் என்று எடப்பாடியார் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்’’ என்றும் சொல்லியிருக்கிறார் சூப்பர்ஸ்டார். உண்மை தான் உச்ச நட்சத்திரமே. கண்டக்டராக வாழ்க்கையை தொடங்கிய நீங்களும் கன்னித்தமிழ் பூமியின் சூப்பர்ஸ்டாராவோன் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டீர்கள். ஆனாலும் காலம் கொடுக்கும் வாய்ப்பை கண்ணியம் குன்றாத கடுமையான உழைப்பால் தமதாக்கி கொள்பவர்கள் தான் தலைவர்களாக, அறிஞர்களாக தடம் பதித்து உலக சரித்திரத்தில் இடம் பிடிக்கிறார்கள். அப்படிதான் எங்கள் எடப்பாடியாரும் படிப்படியா உழைத்து தான் கொண்ட இயக்கத்தின் மீது குன்றாத விசுவாசத்தை பதித்து சட்டமன்ற உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக இன்று தமிழகத்தின் முதலமைச்சராக உயர்ந்து ஒரு தொண்டனாலும் தலைவனாக முடியும், தூய தமிழ் உலகை ஆளுகிற முதல்வனாக முடியும் என்று நிரூபித்து இருக்கிறார். 

ஒரு சினிமாவில் நடித்துவிட்டு, மறு சினிமா வாய்ப்பு வருவதற்கு முன்பே முதல்வராக ஆசைப்படும் ரீல் தலைவர்களுக்கு மத்தியில் எடப்பாடியார் ஒரு ரியல் தலைவர் என்பதை உணர்த்துகிற வரலாறு, எப்படியாயினும் மாற்றாரும் போற்றும் சாதனை சரித்திரத்தை கழகம் நாளையும் படைக்கும் நீங்கள் சுட்டி காட்டுகிற அதிசயம் இதுதான் என்பதை கல்வெட்டும் சாட்சியாய் உரைக்கும்’’ என்று அந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளனர். 

NEXT STORY