உயர்மின் கோபுரங்கள் எதிர்ப்புப் போராட்டக் குழுவை முதல்வர் அழைத்துப் பேச வேண்டும்: முத்தரசன் கோரிக்கை

தமிழகம்
Updated Nov 16, 2019 | 14:48 IST | Times Now

விவசாயிகள் கோரிக்கைளை அரசு அலட்சியம் செய்வது விவசாயிகளை போராட்டத்திற்கு நெட்டித் தள்ளி நிர்பந்திக்கிறது என்பதையும் அரசும், அமைச்சரும் உணர வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு கேட்ட

Mutharasan, CPI State secretary
Mutharasan, CPI State secretary   |  Photo Credit: Twitter

சென்னை: உயர்மின் கோபுரங்கள் எதிர்ப்புப் போராட்டக் குழுவை முதல்வர் அழைத்துப் பேச வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டின் மேற்கு மற்றும் வடக்கு மாவட்டங்களில் உயர் மின்னழுத்த தொடரமைப்புக்கான உயர்மின் கோபுரங்கள்  விவசாய விளை நிலங்கள் வழியாக அமைக்கும் திட்டத்திற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

விவசாய விளை நிலங்களை தவிர்த்து, மாற்றுவழியில் மின் தொடரமைப்பு அமைப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என கோரி வருகின்றனர். இந்தக் கோரிக்கை மீது ஒரு தீர்வு காணப்படாத நிலையில் மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு தீர்வு காண வலியுறுத்தி வருகிற 18.11.2019 ஆம் தேதி 50 க்கும் மேற்பட்ட இடங்களில் அமைதி வழி மறியல் அறப்போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர். இந்தப் போராட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் பங்கேற்கும் என முன்னதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டிய தமிழ்நாடு அரசின் மின்துறை மற்றும் மதுவிலக்கு அமைச்சர் எதிர்கட்சிகள் மீது குற்றம்சாட்டி, மக்கள் கவனத்தை திசை திருப்பும் மலிவான அரசியலில் ஈடுபட்டிருப்பது வேதனையானது.

கேரள மாநிலத்தில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர், அது விவசாய விளை நிலங்களில் அமைக்கப்படவில்லை என்பதையும், விவசாயிகள் கேட்டுக் கொண்ட பகுதிகளில் நிலத்தடியில் புதைக்கப்பட்ட கம்பிவடப் பாதையாக அமைக்கப்பட்டிருப்பதையும் ஏன் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை என்பது புதிராக இருக்கிறது.

எதுவாயினும் சரி, விவசாயிகள் பாதிப்பு என்பது அரசியல் தொடர்புடையது அல்ல என்பதையும்,  விவசாயிகள் கோரிக்கைளை அரசு அலட்சியம் செய்வது விவசாயிகளை போராட்டத்திற்கு நெட்டித் தள்ளி நிர்பந்திக்கிறது என்பதையும் அரசும், அமைச்சரும் உணர வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு கேட்டுக் கொள்கிறது.

போராட்டங்களை வெறும் சட்டம் - ஒழுங்கு பிரச்சினையாக பார்க்கும் குறுக்குப் பார்வை ஒரு சுமூகத் தீர்வுக்கு வழிவகுக்காது என்பதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர், உயர்மின் கோபுரங்கள் அமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் போராட்டக் குழுவினரை அழைத்துப் பேசி தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

NEXT STORY