6-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் சர்ச்சைக்குரிய கேள்விகள்: மு.க.ஸ்டாலின், டிடிவி தினகரன் கண்டனம்

தமிழகம்
Updated Sep 08, 2019 | 12:42 IST | Times Now

சிறுபான்மையினர் மற்றும் பட்டியலின மக்களைக் கொச்சைப்படுத்தும் வகையில் 6-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் பகுதிகளை உடனடியாக நீக்க வேண்டும்

the question paper was set by Kendriya Vidyalaya
the question paper was set by Kendriya Vidyalaya   |  Photo Credit: Twitter

சென்னை: கேந்திரிய வித்யாலயா பள்ளியின் ஆறாம் வகுப்பு புத்தகத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக் கேள்விகளுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளியின், ஆறாம் வகுப்பு பாடத்திட்டத்தில் சமூக அறிவியல் புத்தகத்தில் கேட்கப்பட்டிருக்கும் சில கேள்விகள், தலித்துகள் மற்றும் சிறுபான்மையினரை இழிவுபடுத்துவதாக, சர்ச்சை எழுந்துள்ளது. சர்ச்சைக்குரிய அந்தக் கேள்விகள் அடங்கிய பக்கங்கள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

அதில், 'தலித் என்றால் யார்?' என்ற கேள்விக்கு பதில்களுக்கான வாய்ப்புகளாக, வெளிநாட்டவர், தீண்டத்தகாதவர்கள், நடுத்தர வகுப்பினர், உயர் வகுப்பினர் என்பவை தரப்பட்டுள்ளன. அதேபோன்று, 'முஸ்லிம்களின் பொதுப்பண்புகள் என்ன?" என்ற கேள்விக்கு பெண்களைப் பள்ளிக்கு அனுப்பாதவர்கள், சைவ உணவு உண்பவர்கள், நோன்பு காலத்தில் உறங்காதவர்கள், இவையனைத்தும் என பதில்களுக்கான வாய்ப்புகளாக தரப்பட்டிருந்தன.

மாணவர்களின் பாடப்புத்தகத்தில் இத்தகைய கேள்விகள் இடம்பெற்றிருந்ததற்கு, அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "சாதி பாகுபாட்டையும் வகுப்புவாதத்தையும் பரப்பும் கேள்விகள் கேந்தரிய வித்யாலயா 6ம் வகுப்புத் தேர்வில் இடம்பெற்றிருப்பதை கண்டு பெரும் அதிர்ச்சியடைந்தேன். இப்படிப்பட்ட கேள்விகளை இடம்பெறச் செய்தவர்கள் விசாரிக்கப்பட்டு உரிய சட்டங்கள் மூலம் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்" என்று கூறியுள்ளார்.


மேலும், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், சர்ச்சைக்குரிய பாடப்பிரிவுகளை நீக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "சிறுபான்மையினர் மற்றும் பட்டியலின மக்களைக் கொச்சைப்படுத்தும் வகையில் 6-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் பகுதிகளை உடனடியாக நீக்க வேண்டும்.

குறைந்தபட்சப் புரிதல்கூட இல்லாமல் மாணவர்களின் மனதில் நஞ்சை விதைக்கும் வகையில் இதுபோன்ற பாடத்தை இடம்பெறச் செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இத்தகைய கருத்துகளோடு இளம் வயது மாணவர்களுக்குப் பாடங்களைத் தயாரிப்பதும் , அதனை அடிப்படையாக கொண்டு தேர்வில் கேள்விகள் கேட்பதும் தவறானது. இதற்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்," என்று தினகரன் தெரிவித்துள்ளார்.

மதிமுக தலைவர் வைகோ உள்பட பல அரசியல் கட்சித்தலைவர்களும் சர்ச்சைக்குரிய கேள்விகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...