தந்தை பெரியாரை அறிவார்ந்த தீவிரவாதி என்று பாபா ராம்தேவ் கூறியதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ஆங்கில ஊடகத்துக்கு பேட்டியளித்த பாபா ராம்தேவ், பெரியார் டாக்டர் அம்பேத்கர் ஆகியோரைப் பின்பற்றுபவர்களைக் கண்டு, கவலையாக உள்ளது என்றும் தந்தை பெரியாரை ‘’அறிவார்ந்த தீவிரவாதி’’ என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பாபா ராம்தேவின் இந்தப் பேட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் நேற்று ட்விட்டரில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு, அவரது பதஞ்சரி நிறுவனத்தின் தயாரிப்புகளை புறக்கணிக்க வேண்டும் என்று #RamdevInsultsPeriyar, #ArrestRamdev, #ShutdownPatanjali போன்ற ஹேஸ்டேகுகள் ட்ரண்டாகின.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், ‘’தந்தை பெரியார் மற்றும் எங்களது கொள்கைகள் மீது வலதுசாரி சக்திகளால் குறிவைத்து நிகழ்த்தப்படும் தாக்குதல்களை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தந்தை பெரியார் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடினார். பெண்ணுரிமைக்காக குரல் கொடுத்தார். சாதி முறைக்கு எதிராகப் பேசினார். ஆதிக்க சக்திகளுக்கு எதிரான திராவிடக் கருத்தியலை திராவிட முன்னேற்றக் கழகம் என்றும் பாதுகாக்கும். ’’ என்று தெரிவித்துள்ளார்.