சர்ச்சை பேச்சு.. கமலுக்கு நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்ற மதுரை கிளை

தமிழகம்
Updated May 20, 2019 | 11:57 IST | Times Now

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கு மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஜாமீன் வழங்கியுள்ளது.

Makkal Needhi Maiam, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்  |  Photo Credit: Twitter

மதுரை: சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என பேசிய விவகாரத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. 

அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று பேசியிருந்தார். கமலின் இந்த பேச்சுக்கு சிலர் ஆதரவு தெரிவித்திருந்தனர். இந்து அமைப்புகள் கமல்ஹாசனின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தன. 

இந்து முன்னணி நிர்வாகி அளித்த புகாரின் பேரில் அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் மத உணர்வை புண்படுத்துதல், மத மோதல்களை தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கமல்ஹாசன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து தமக்கு முன் ஜாமீன் வழங்கக் கோரி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என பேசிய விவகாரத்தில் அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் கமல்ஹாசன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். 15 நாட்களுக்குள் அரவக்குறிச்சி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி கமல்ஹாசன் முன் ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம் எனவும் 2 நபர் உத்தரவாதத்துடன், ரூ.10 ஆயிரம் பிணைத் தொகை செலுத்தி முன் ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

NEXT STORY