கனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கை தமிழிசை திரும்பப் பெற சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தமிழகம்
Updated Oct 14, 2019 | 13:14 IST | Times Now

கனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கை திரும்பப் பெற்றதாக 10 நாட்களுக்குள் பத்திரிகையில் விளம்பரம் செய்ய தமிழிசைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Kanimozhi, Tamilisai Soundararajan, கனிமொழி, தமிழசை சௌந்தரராஜன்
கனிமொழி, தமிழசை சௌந்தரராஜன்  |  Photo Credit: Twitter

சென்னை: நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி வெற்றி பெற்றதற்கு எதிராக தமிழிசை சௌந்தரராஜன் தாக்கல் செய்த வழக்கை திரும்பப் பெற சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும், வழக்கை திரும்பப் பெற்றதாக 10 நாட்களுக்குள் பத்திரிகையில் விளம்பரம் செய்யவும் தமிழிசைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

கனிமொழியின் கணவர் சிங்கப்பூர் பிரஜை எனவும் அவரது வருமானவரி குறித்து வேட்பு மனுவில் குறிப்பிடவில்லை எனவும் குற்றம்சாட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த தமிழிசை சௌந்தரராஜன், கனிமொழியின் வெற்றியை செல்லாததாக அறிவிக்க வேண்டும் என கோரினார்.

இம்மனு மீது பதிலளிக்க கனிமொழி மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை செளந்தரராஜன், தெலங்கானா மாநில ஆளுநராக கடந்த 8-ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். இதனை தொடர்ந்து, கனிமொழி வெற்றிக்கு எதிராக தொடுத்த வழக்கை திரும்பப் பெறுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், கனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கை திரும்பப் பெற தமிழிசைக்கு அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் திமுக சார்பில் கனிமொழி ஆகியோர் தூத்துகுடி மக்களவை தொகுதியில் போட்டியிட்டனர். இதில், தமிழிசையை விட 3,47,000 வாக்குகள் அதிகம் பெற்று கனிமொழி மக்களவை உறுப்பினராக தேர்வானது குறிப்பிடத்தக்கது.

NEXT STORY