கருணாநிதியின் 96-வது பிறந்தநாள்: மு.க. ஸ்டாலின் மலர்தூவி மரியாதை

தமிழகம்
Updated Jun 03, 2019 | 09:57 IST | Times Now

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 96-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

karunanidhi birthday
கருணாநிதி நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் அஞ்சலி  |  Photo Credit: Twitter

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் பிறந்தாளையொட்டி அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவரது சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 96-வது பிறந்தநாளை திமுக தொண்டர்கள் தமிழகம் முழுவதும் இன்று கொண்டாடி வருகின்றனர். இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கருணாநிதியின் திருவுருவச் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் திமுக முக்கிய நிர்வாகிகள், எம்.பி., எம்எல்ஏக்களும் கருணாநிதி சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து மெரினாவில் உள்ள அலங்கரிக்கப்பட்டுள்ள கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். முன்னதாக அண்ணா நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, திண்டுக்கல் ஐ. பெரியசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோரும் அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதியின் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். 

கருணாநிதியின் பிறந்நாளையொட்டி திமுக சார்பில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் இன்று மாலை தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் தலைமையில் மாபெரும் பொது கூட்டம் நடைபெறுகிறது. இதில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. பொருளாளர் துரைமுருகன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். 
 

NEXT STORY