’உண்மை கசக்கும்; கசப்பே வியாதிக்கு மருந்தாகும்’ - திருப்பரங்குன்றத்தில் கமல் பிரச்சாரம்!

தமிழகம்
Updated May 15, 2019 | 18:23 IST | Times Now

அரவக்குறிச்சியில் நான் கூறிய கருத்துக்கு பல்வேறு தரப்பிலும் கோபப்படுகின்றனர். ஆனால், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று நான் கூறியது சரித்திரத்தில் இருக்கும் உண்மை.-கமல்ஹாசன்

election 2019, தேர்தல் 2019
கமல்ஹாசன்  |  Photo Credit: Twitter

மதுரை: இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என நான் கூறியது வரலாற்று உண்மை என திருப்பரங்குன்றத்தில் இன்றைய பிரச்சாரத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

அரவக்குறிச்சி பிரச்சாரத்தின்போது, கமல்ஹாசன் இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று கூறியது பெரும் சர்ச்சைக்குள்ளானது.  பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்வினைகள் எழுந்த நிலையில் இரண்டு நாட்கள் அவர் பிரச்சாரத்தை ரத்து செய்திருந்தார். 

இந்நிலையில் அவர் இன்று மதியம் திருப்பரங்குன்றம் வேட்பாளரான சக்திவேலுக்கு ஆதரவாக தோப்பூர் பகுதியில் வாக்கு சேகரித்து பேசினார்.

அப்போது பேசிய அவர், ``அரவக்குறிச்சியில் நான் கூறிய கருத்துக்கு பல்வேறு தரப்பிலும் கோபப்படுகின்றனர். ஆனால், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று நான் கூறியது சரித்திரத்தில் இருக்கும் உண்மை.

கோட்ஸே குறித்த எனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. யாரும் எனது பேச்சை முழுமையாக புரிந்துகொள்ளவில்லை, நான் யாரையும் சண்டைக்கு இழுக்கவில்லை. யாரையும் புண்படுத்தும் வகையில் நான் பேசுவதில்லை ; ஆனால் சரித்திர உண்மையை பேசினால் புண்ணாகும் என்றால் அதை ஆற்ற வேண்டும். உண்மை கொஞ்சம் கசக்கும். ஆனால் கசப்பு மருந்தாகும். மதச் செருக்கு , சாதிச் செருக்கு எல்லாம் நிற்காது ; நான் சொன்னது சரித்திர உண்மை. இந்த அரசு வீழும். வீழ்த்தப்பட வேண்டும். வீழ்த்துவோம். 

என் பேச்சை முழுவதுமாக கேட்காமல் நுனிப்பகுதியை மட்டும் கத்தரித்து ஒளிப்பரப்பி விட்டனர். ஒரு முறை மட்டுமே நான் சொன்னதை மீண்டும் மீண்டும் போட்டுக் காட்டி ஊடகங்கள் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டன. வாலையும், தலையும் வெட்டி எதை வேண்டுமானாலும் மாற்றலாம் என்பது போலதான் இந்த பேச்சும் மாறியிருக்கிறது.

ஒருமுறை பேசிய என் மீது வழக்கு என்றால் பலதடவை என் பேச்சை ஒளிப்பரப்பிய ஊடகங்கள் மீதும் வழக்கு போட வேண்டியது அவசியம் அல்லவா? என் மீது குற்றம் சொல்லும்போது அதை நம்புவது போல சொல்லுங்கள். ஹேராம் படத்தை பார்த்துவிட்டு சொல்லுங்கள். அந்த படம் வந்து 20 வருடங்கள் ஆகிவிட்டன. அதே போன்று தேவர் மகன் படத்தையும் பற்றி சாதி அடையாளம் என்று விமர்சிக்கின்றனர். ஆனால், அதிலும் நான் கூடி வாழ வேண்டும் என்கிற கருத்தைதான் சுட்டிக் காட்டியிருக்கிறேன். 

என் வீட்டில் உள்ளவர்களும் இந்துகள்தான். என் மகள் சாமி கும்பிடுபவர்தான். அவர்களை நான் துன்புறுத்த மாட்டேன். என்னைப் பொறுத்த வரை கூடி வாழ சகிப்புத்தன்மையை விட ஏற்றுக்கொள்ளும் பக்குவமே தேவை.

நான் வாக்குக்காக உங்களைக் கும்பிடவில்லை. நான் என்னைத் தலைவனாகவும் ஒருபோதும் பார்க்கவில்லை. தொண்டர்களின் அடிபொடி நான். மக்களிடம் உண்மையே வெல்லும்.

நான் இன்று தீவிர அரசியலில் இறங்கியிருக்கிறேன். அதனால் என் பேச்சு தீவிரமாகத்தான் இருக்கும். அதில் வன்முறை இருக்காது. வார்த்தை ஜாலங்கள் இருக்காது. நான் தீவிரவாதி என்றுதான் சொன்னேனே தவிர பயங்கரவாதி, கொலைகாரன் என்றெல்லாம் சொல்லவில்லை.

பத்திரிக்கையாளர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். இந்த முறையாவது என் பேச்சை முழுமையாக கொண்டு சேரும் பொறுப்பு உங்களிடம் இருக்கிறது. உண்மை கசக்கும்; ஆனால், கசப்பே வியாதியைக் குணமாக்கும் மருந்து’’ என்று பேசியுள்ளார்.  


 

NEXT STORY
’உண்மை கசக்கும்; கசப்பே வியாதிக்கு மருந்தாகும்’ - திருப்பரங்குன்றத்தில் கமல் பிரச்சாரம்! Description: அரவக்குறிச்சியில் நான் கூறிய கருத்துக்கு பல்வேறு தரப்பிலும் கோபப்படுகின்றனர். ஆனால், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று நான் கூறியது சரித்திரத்தில் இருக்கும் உண்மை.-கமல்ஹாசன்
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles