சென்னை: நீங்கள் ஒரு முன்னோடியாக திகழ முதலில் இந்த பேனர் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பிரதமா் மோடிக்கு மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் வேண்டுகோள் வைத்துள்ளாா்.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜீ ஜின்பிங் ஆகியோர் வரும் 11-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை மாமல்லபுரத்தில் சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து பேச உள்ளனர். தமிழகத்துக்கு வருகை தரும் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங்கை வரவேற்று பேனர் வைக்க அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில், தமிழக அரசின் இந்த நடவடிக்கையை விமர்சிக்கும் வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், ட்விட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.
பிரதமர் அலுவலக டுவிட்டர் பக்கத்தை டேக் செய்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், " பேனா் கலாசாரத்தால் சுபஸ்ரீ என்ற இளம்பெண் உயிர் பலியாகியுள்ளது. அதிலிருந்து தமிழகமும், தமிழர்களும் இன்னும் மீளாத நிலையில், உங்கள் வருகைக்கு பேனர்கள் வைக்க அரசு நீதிமன்றத்தில் அனுமதி கோரியுள்ளது. பிரதமரான நீங்கள் ஒரு முன்னோடியாக திகழ முதலில் இந்த பேனர் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்; இது தமிழர்களின் உணர்வை நீங்கள் பிரதிபலிப்பதாக அமையும். அதேசமயம் உங்களுக்கும் பெரும் புகழையும் கொண்டு வந்து சேர்க்கும" என்று கூறியுள்ளாா்.