36 ஆண்டுகளுக்குப் பின் தொடங்கியது சென்னை - யாழ்ப்பாணம் விமான சேவை

தமிழகம்
Updated Oct 17, 2019 | 11:02 IST | Times Now

உள்நாட்டு யுத்தத்திற்கு பிறகு யாழ்ப்பாணம் விமான நிலையத்தை புனரமைக்கும் பணி தாமதமாகி வந்த நிலையில் தற்போது பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்ட உள்ளது.

Jaffna International Airport, யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம்  |  Photo Credit: Twitter

யாழ்ப்பாணம்: சென்னையில் இருந்து இலங்கை வடக்கு மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணத்திற்கு 36 ஆண்டுகளுக்குப் பின் விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. 

சுதந்திரத்திற்குப் பிறகு சென்னை-யாழ்ப்பாணம்-கொழும்பு விமான சேவை தொடங்கப்பட்ட நிலையில், இலங்கையில் உள்நாட்டு யுத்தம் காரணமாக 1983-ஆம் ஆண்டு விமான சேவை நிறுத்தப்பட்டது. 2009-ஆம் ஆண்டில் உள்நாட்டு யுத்தம் நிறைவு பெற்ற நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சென்னை-யாழ்ப்பாணம் விமான சேவை இன்று தொடங்கப்பட்டுள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சியில் விமானப்படை பயன்பாட்டிற்காக யாழ்ப்பாணம் அருகே பலாலி நகரத்தில் விமானத்தளம் அமைக்கப்பட்டது. சுதந்திரத்திற்கு பிறகு இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமாக பலாலி விமான நிலையம் மாற்றப்பட்டது. உள்நாட்டு யுத்தத்திற்கு பிறகு விமான நிலையத்தை புனரமைக்கும் பணி தாமதமாகி வந்த நிலையில் தற்போது யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது.

 

 

ஜூலை மாதம் தொடங்கிய புனரமைப்பு பணி தற்போது நிறைவுபெற்ற நிலையில் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்று திறந்து வைத்தனர். 

 

 

சென்னை, திருச்சி மற்றும் கொச்சி நகரங்களில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு அலைன்ஸ் ஏர் விமானங்கள் இயக்கப்பட உள்ளன. அலைன்ஸ் ஏர் நிறுவனம் ஏர் இந்தியா குழுமத்திற்கு சொந்தமானதாகும். இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பிலும் விமான நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

NEXT STORY