என் மகள் தூக்குப் போட்டுக் கொண்ட கயிறு எங்கே? - ஃபாத்திமாவின் தந்தை லத்தீஃப் கேள்வி

தமிழகம்
Updated Nov 15, 2019 | 18:01 IST | Times Now

’’நாங்கள் வரும்போது அவளின் அறையில் தூக்குக் கயிறு இல்லை, அவளது அறை பூட்டி சீல் வைக்கவும் இல்லை’’ - ஃபாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீஃப்

ஃபாத்திமாவின் தந்தை லத்தீஃப்
ஃபாத்திமாவின் தந்தை லத்தீஃப்  |  Photo Credit: Twitter

தன்னுடைய மகளின் தற்கொலையில் தனக்கு சந்தேகம் இருப்பதாக ஃபாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீஃப் இன்று சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

கடந்த 8ஆம் தேதி சென்னை ஐஐடியில், கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த ஃபாத்திமா என்ற முதலாமாண்டு மாணவி தனது விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துண்டார். அப்போது அவரது தற்கொலைக்கு அவர் குறைவான மதிப்பெண் எடுத்ததுதான் காரணம் என்று கூறப்பட்டது. ஆனால் அதன்பின் மாணவியின் செல்ஃபோனில் தனது மரணத்துக்கு பேராசிரியர் சுதர்சன் பத்பநாபன் தான் காரணம் என்று ஒரு செய்தி கிடைத்தபின் அவரைக் கைது செய்க்கோரி மாணவியின் பெற்றோரும் மற்ற தரப்பினரும் கூறிவருகிறார்கள்.

இந்நிலையில் நேற்று கேரள முதலமைச்சரை சந்தித்த மாணவியின் பெற்றோர் இன்று சென்னை வந்து தமிழக டிஜிபியிடம் பேசினார். பின் செய்தியாளர்களை சந்தித்தவர், டிஜிபியைச் சந்தித்து தனது மகள் தற்கொலை குறித்து தங்களிடம் இருந்த சில தகவல்களைக் கொடுத்தோம். எனது மகள் தற்கொலை செய்யும் அளவுக்கு கோழை அல்ல, முதலில் அவர் மதிப்பெண்ணைக் காரணம் காட்டினார்கள். அவள் நன்கு படிக்கும் பெண். நாங்கள் வரும்போது அவளின் அறையில் தூக்குக் கயிறு இல்லை, அவளது அறை பூட்டி சீல் வைக்கவும் இல்லை, அவளது பொருட்கள் சிதறிக் கிடந்தன. அவள் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டால் அந்தக் கயிறு எங்கே? அந்தக் கயிறு அவளுக்கு எங்கிருந்து கிடைத்தது? என்று கேட்டார்.

பின், அவளது இந்த மரணம் தற்கொலைதானா என்ற சந்தேகம் எனக்கு உள்ளது. அவள் இறக்கும்முன் கேண்டீனில் ஒரு மணி நேரம் அழுதுள்ளார். தினமும் என்னுடன் இரவு பேசுவார், அப்போது அனைத்து விஷயங்களையும் கூறுவார். ஆனால் அன்றைய தினம் என்னிடம் பேசவில்லை. ஏற்கனவே அந்த பேராசிரியருக்கும் தனக்கும் ஆகவில்லை என்று கூறினார். அவர்மீது அச்சம் கொண்டிருந்தார். அவளின் ஆன்சர் ஷீட்டைக் கூட அவள் வாங்காமல் தோழிதான் வாங்கிக் கொடுத்துள்ளார். இதுவரை எனது மகள் மரணம் தொடர்பாக ஐஐடி நிர்வாகத்திடம் இருந்து ஒருவரும் பேசவே இல்லை. எனக்கோ என் மனைவிக்கோ ஒருவரும் போனில் கூட பேசவில்லை, விளக்கம் அளிக்கவில்லை. நான் சிசிடிவி ஃபூட்டேஜ் கேட்டு பல நாட்கள் ஆகின்றன. ஆனால் தற்போது வரை எனக்கு அது அளிக்கப்படவில்லை. என் மகள் கடிதம் எழுதும் பழக்கம் உடையவர், அதனால் கண்டிப்பாக அவர் மரணம் குறித்தும் கடிதம் எழுதி இருக்க வேண்டும். ஆனால் அது எஃப.ஐ.ஆரில் குறிப்பிடப்படவில்லை. இவர்கள் இப்படி மறைப்பார்கள் என்றுதான் எனது மகள் செல்ஃபோனில் எழுதியுள்ளார். மேலும் போலீஸார் அவளது செல்ஃபோனை எங்கள் முன் திறந்துபார்க்க வேண்டும். இவை அனைத்தையும் டிஜிபியிடம் கூறியுள்ளேன். நான் கேரளத்தில் வசிப்பவன். அதனால் பத்திரிகையாளர்களாகிய நீங்கள்தான் இங்கு என்ன நடக்கிறது என்பதை வெளிச்சத்துக்குக் கொண்டுவர வேண்டும். எனது மகளின் மரணம் கொலையோ தற்கொலையோ ஆனால் அதற்கு சுதர்சன் பத்பநாபந்தான் காரணம், அவருடன் இன்னும் சில பேராசியர்களும் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர்’’ என்று கூறினார். 

செய்தியாளர்கள் சந்திப்புக்குப் பின் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்று சந்தார் லத்தீஃப். 

NEXT STORY