அடுத்த 3 நாட்களுக்கு மழையின் தீவிரம் இருக்கும் - வானிலை ஆய்வு மையம்

தமிழகம்
Updated Sep 20, 2019 | 17:03 IST | Times Now

சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையத் தகவலில் கூறப்பட்டுள்ளது.

file photo
file photo  |  Photo Credit: Getty

சென்னை: தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழையின் தீவிரம் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட தகவலின்படி, தெற்கு தீபகற்ப பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்து வரும் மூன்று தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

உள் தமிழகம் மற்றும் கடலோரத் தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம் உடையாள்பட்டியில் 7 சென்டிமீட்டரும், தஞ்சையில் 6 சென்டிமீட்டரும், புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை, திருமயம், தஞ்சை மாவட்டம் வல்லம், பட்டுக்கோட்டை, சேலம் மாவட்டம் ஆத்தூர், ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, தேவகோட்டை, திருவாரூர், வலங்கைமான், மயிலாடுதுறையில் 5 சென்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது. 

NEXT STORY