அடுத்த 24 மணிநேரத்துக்கு இந்த இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு

தமிழகம்
Updated Oct 17, 2019 | 18:18 IST | Times Now

தென்கிழக்கு அரபிக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் அடுத்த 24 மணி நேரத்தில் இந்த 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

மழை பற்றிய அறிவிப்பு
மழை பற்றிய அறிவிப்பு  |  Photo Credit: Getty Images

அடுத்த 24 மணிநேரத்துக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த 2 தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையிலும் நேற்று இரவு முதல் விடாது மழை பெய்து சாலையோரங்களில் தண்ணீர் தேங்கின. கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக எட்டயபுரத்தில் 14 செ.மீ மழையும் கொடைக்கானலில் 13 செ.மீ மழையும், திருவாரூரில் 9 செ.மீ மழையும், சென்னை மீனம்பாக்கத்தில் 5 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரன் இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘’ வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் மிதமான மழை பெய்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், தூத்துக்குடி, நீலகிரி, நெல்லை, கோவை, திருவண்ணாமலை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. ’’ என்று தெரிவித்துள்ளார். மேலும் மாலத்தீவு மற்றும் கேரள கடலோரப் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 

NEXT STORY