வெங்காயம் விலை 3 நாட்களில் குறைய வாய்ப்பு - தமிழக அரசு விளக்கம்

தமிழகம்
Updated Sep 23, 2019 | 18:49 IST | Times Now

வெங்காயம் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவது குறித்து தலைமைச் செயலகத்தில் இன்று அமைச்சர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

file photo
File photo  |  Photo Credit: Times Now

சென்னை: நாசிக் மற்றும் ஆந்திரப் பிரதேசத்திலிருந்து அதிக அளவில் வெங்காய லாரிகள் இன்று கோயம்பேடு மொத்த விற்பனை மையத்திற்கு வந்துகொண்டிருப்பதால் இன்னும் இரண்டு அல்லது 3 நாட்களில் விலை குறைய வாய்ப்புள்ளது என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

வெங்காயம் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவது குறித்து தலைமைச் செயலகத்தில் இன்று அமைச்சர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு தமிழ்நாடு கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், "வெளிச்சந்தையில் வெங்காயம் அதிகமான விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக செய்திகள் வரப்பெற்றது தொடர்பாக கூட்டுறவுத் துறை அமைச்சர் மற்றும் உணவுத் துறை அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் இன்று (23.09.2019) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அரசு முதன்மைச் செயலாளர், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர், ஆணையாளர், உணவுப் பொருள் வழங்கல் துறை, மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்துகொண்ட அலுவலர்கள், 'பெரிய வெங்காயம் கிலோ ஒன்றுக்கு ரூ.45 முதல் ரூ.46 வரை பண்ணை பசுமைக் கடைகளில் விற்கப்படுவதாகவும், தனியார் கடைகளில் ரூ.55 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்படுவதாகவும், அதிகமான விலைக்கு விற்கப்படுவதில்லை எனவும், செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என தெரிவித்தனர்.

சமீபகாலமாக மகாராஷ்டிரம் மற்றும் கர்நாடகாவில் மழை பெய்ததால் வெங்காய வரத்து குறைந்ததன் காரணமாக விலையேற்றம் இருந்து வந்தது. நாசிக் மற்றும் ஆந்திரப் பிரதேசத்திலிருந்து அதிக அளவில் வெங்காய லாரிகள் இன்று கோயம்பேடு மொத்த விற்பனை மையத்திற்கு வந்துகொண்டிருப்பதால் இன்னும் இரண்டு அல்லது 3 நாட்களில் விலை குறைய வாய்ப்புள்ளது. அமைச்சர்கள் வெங்காய விலை தொடர்பான நிகழ்வுகளை அரசு உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். எங்கும் பதுக்கல் எதுவும் இல்லாமல் பொதுமக்களுக்கு எந்தவித சிரமமும் இல்லாமல் வெங்காயம் கிடைப்பதை உறுதிசெய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன' என்று தெரிவித்தனர்.

கடந்த ஆண்டுகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் போல் நடப்பாண்டிலும் தேவைப்படும்போது சிறப்பு நடவடிக்கைகள் மூலமாகவும் விலை கட்டுப்பாட்டு நிதியம் மூலமாகவும், அரசே கொள்முதல் செய்து நுகர்வோருக்கு குறைந்த விலையில் விற்பனை செய்ய முதல்வரின் உத்தரவு பெற்று நுகர்வோர் நலன் பாதுகாக்கப்படும் என அமைச்சர்கள் தெரிவித்தனர்" இவ்வாறு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NEXT STORY