ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை நம்பிக்கையோடு மீட்கும் பணி தீவிரம்

தமிழகம்
Updated Oct 26, 2019 | 15:01 IST | Times Now

இன்று காலை குழந்தை மீது மண் சரிந்து மூடியதைத் தொடர்ந்து குழந்தையின் பேச்சு, மூச்சு சத்தமும் கேட்காததால் பதற்றமான சூழல் நிலவுகிறது.

Baby Surjith stuck in borwell, ஆழ்துளை கிணற்றில் சிக்கிக்கொண்ட குழந்தை சுர்ஜித்
ஆழ்துளை கிணற்றில் சிக்கிக்கொண்ட குழந்தை சுர்ஜித்  |  Photo Credit: Twitter

திருச்சி: மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுர்ஜித் மீது மண் சரிந்து மூடியதால் மீட்பு பணியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டியில் நேற்று மாலை 5 மணியளவில் 2 வயது குழந்தையான சுர்ஜித் விளையாடிக் கொண்டிருந்த போது ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். இதையடுத்து, கிராம மக்கள், காவல்துறையினர், அரசு அதிகாரிகள் ஆகியோர் மீட்பு பணியில் ஈடுபடத் தொடங்கினர். அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணிகளை பார்வையிட்டனர்.

17 மணிநேரமாக நடைபெற்று வரும் மீட்புப் பணியில் தீயணைப்பு வீரர்கள், வருவாய்த்துறையினர், மருத்துவர்கள், தன்னார்வலர்கள், ஐஐடி அங்கீகாரம் பெற்ற நாமக்கல் வெங்கடேசன் குழுவினர் உள்ளிட்ட பலரும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தற்போது குழந்தையின் மீது மண் சரிந்து மூடியதால் மீட்புப் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

30 அடியில் குழந்தை சிக்கியிருந்த நிலையில், கயிறு கட்டி மீட்க முயற்சிகள் நடைபெற்றன. பலமுறை முயற்சி செய்தும் பலனலிக்காமல், குழந்தை சரிந்து 70 அடிக்கு சென்றது. இந்நிலையில், இன்று காலை குழந்தை மீது மண் சரிந்து மூடியதைத் தொடர்ந்து குழந்தையின் பேச்சு, மூச்சு சத்தமும் கேட்காததால் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதையடுத்து, முதலமைச்சர் கேட்டுக்கொண்டதன் பேரில் தேசிய பேரிடர் மீட்புக் குழு மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழு ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

NEXT STORY