மேகதாது அணை கட்ட அனுமதிக்கக் கூடாது - மத்திய அமைச்சர்களுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

தமிழகம்
Updated Oct 10, 2019 | 12:38 IST | Times Now

மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

Prakash Javadekar, Edappadi K Palaniswami, Gajendra Singh Shekhawat, பிரகாஷ் ஜவடேகர், எடப்பாடி பழனிசாமி, கஜேந்திர சிங் ஷெகாவத்
பிரகாஷ் ஜவடேகர், எடப்பாடி பழனிசாமி, கஜேந்திர சிங் ஷெகாவத்  |  Photo Credit: Twitter

சென்னை: காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் திட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு தனித்தனியே கடிதம் எழுதியுள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி உத்தரவு மற்றும் 2018 பிப்ரவரி 16 அன்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக இருப்பதால் மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு மத்திய ஜல் சக்தி துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கக்கூடாது என முதல்வர் பழனிசாமி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

அக்கடிதத்தில் மேலும் கூறியதாவது: “மேகதாது அணை திட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழகம் வழக்கு தொடுத்துள்ளது. கடந்த ஜூலை 19 அன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் மதிப்பீட்டுக் குழு, கர்நாடக அரசின் மேகதாது அணைக்கான வரைவு திட்ட அறிக்கையை நிராகரித்தது. இதனை தொடர்ந்து மீண்டும் அக்குழுவிடம் கர்நாடக அரசு முறையிட்டுள்ளதாக தமிழக அரசுக்கு தகவல் கிடைத்துள்ளது. தமிழக அரசு இதனை வன்மையாக கண்டிக்கிறது. தமிழகத்தின் அனுமதி பெறாமல் காவிரி ஆற்றில் அணை கட்ட கர்நாடகாவிற்கு எந்த உரிமையும் இல்லை.” இவ்வாறு அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என மதிப்பீட்டுக் குழுவிடம் உத்தரவிடுமாறு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார் . மேலும், இவ்விவகாரம் தொடர்பாக பிரகாஷ் ஜவடேகருக்கு அழுத்தம் கொடுக்க அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திடம் வலியுறுத்தியுள்ளார் முதல்வர் பழனிசாமி.

NEXT STORY