பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ. 5 குறைக்க வேண்டும்: ராமதாஸ் வேண்டுகோள்

தமிழகம்
Updated Oct 01, 2019 | 22:57 IST | Times Now

அடித்தட்டு மக்களின் சுமையை ஓரளவாவது கட்டுப்படுத்தும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு குறைந்தது 5 ரூபாயாவது குறைக்க மத்திய அரசு முன்வர வேண்டும்.

Dr.Ramadoss
பாமக நிறுவனர் டாக்டர்.ராமதாஸ்  |  Photo Credit: Twitter

சென்னை: பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ. 5 குறைக்க வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், "சவுதி அரேபியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது பயங்கரவாதிகள் நடத்தியத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயரத் தொங்கியிருக்கிறது. பெட்ரோல் விலை இன்று 14 காசுகளும், டீசல் விலை 11 காசுகளும் உயர்ந்ததால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாகவே உலக அளவில் ஏற்படும் மாற்றங்களால் பெட்ரோல், டீசல் விலைகள் கடுமையான மாற்றங்களுக்கு உள்ளாகி வருகின்றன. கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே பெட்ரோல், டீசல் விலைகள் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு கட்டுப்படியாகாத அளவில் தான் உள்ளன என்றாலும் கூட, கடந்த சில மாதங்களில் எரிபொருட்களின் விலை மாற்றங்களுக்கு உள்ளாகமல் இருந்து வந்ததால் மக்கள் ஓரளவு நிம்மதியடைந்து இருந்தனர். ஆனால், சவுதி அரேபியாவில் எண்ணெய் ஆலை மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து எரிபொருள் விலைகள் மீண்டும் உயரத் தொடங்கியுள்ளன. அதாவது 20 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 2.99 ரூபாயும், டீசல் விலை 2.46 ரூபாயும் உயர்ந்துள்ளன.

மேலும், கடந்த 3 நாட்களாக விலை உயராமல் இருந்து வந்த பெட்ரோல், டீசல் விலை நேற்று முதல் மீண்டும் உயரத் தொடங்கி இருப்பதால், இனிவரும் நாட்களில் மேலும், மேலும் உயர்ந்து புதிய உச்சங்களை எட்டும் எனத் தெரிகிறது. டீசல், விலை உயர்வால் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவதியப் பொருட்களின் விலைகளும் உயரத் தொடங்கியிருப்பதால் மக்களின் துயரங்கள் சொல்ல முடியாத அளவுக்கு அதிகரித்திருக்கின்றன. இவ்வளவுக்குப் பிறகும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது வருத்தமளிக்கிறது. 

இந்தியாவில் பெட்ரோல் மீது ஒரு லிட்டருக்கு ரூ.19.98 வீதமும், டீசலுக்கு ரூ.15.83 வீதமும் கலால் வரி வசூலிக்கப்படுகிறது. 2014-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2016 ஜனவரி மாதம் வரையிலான 15 மாதங்களில் மட்டும் பெட்ரோல் மீதான கலால் வரி 11.77 ரூபாயும் டீசல் மீதான கலால் வரி 13.47 ரூபாயும் உயர்த்தப்பட்டன. இடைப்பட்ட காலத்தில் பெட்ரோல், டீசல் விலைகள் உச்சத்தை அடைந்ததைத் தொடர்ந்து, அவற்றின் மீதான கலால் வரி 2017 அக்டோபரில் லிட்டருக்கு 2 ரூபாயும், 2018 அக்டோபரில் லிட்டருக்கு ரூ.1.50ம் குறைக்கப்பட்டது. ஆனால், கடந்த ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய நிதிநிலை அறிக்கையில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ. 2 வீதம் உயர்த்தப்பட்டது.

இப்போது பெருநிறுவனங்கள் மீதான வரி ரூ.1.50 லட்சம் கோடி அளவுக்கு குறைக்கப்பட்ட நிலையில், பெட்ரோல், டீசல் மீதான வரி ஒரு பைசா கூட குறைக்கப்படவில்லை. இது நியாயமல்ல. எனவே, அடித்தட்டு மக்களின் சுமையை ஓரளவாவது கட்டுப்படுத்தும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு குறைந்தது 5 ரூபாயாவது குறைக்க மத்திய அரசு முன்வர வேண்டும்" இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...